போதையில், குடியிருப்புகள் மீது காலி மது பாட்டில்களை வீசி அட்டூழியம்
சென்னை அமைந்தகரையில் குடியிருப்புகள் மீது போதை நபர்கள் காலி மது பாட்டில்களை வீசுவதால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
சென்னை,
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘நெல்சன் சேம்பர்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ‘நெல்சன் சேம்பர்ஸ்’ குடியிருப்பு வளாகம் அருகே பழனியப்பா தியேட்டர் இருந்த இடத்தின் பின்புறம் கூவம் கரையோரத்தில் காலியான மைதானம் உள்ளது.
இந்த மைதானம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. சுண்ணாம்பு கால்வாய் சாலையில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்பவர்கள் சிலர் குறுக்கு வழியாக மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். பயன்பாடு இன்றி கிடப்பதால் மைதானம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
திறந்த வெளி கழிப்பிடமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கஞ்சா புகைப்பதற்கும், குழுவாக அமர்ந்து மது அருந்துவதற்கும் சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். போதை தலைக்கு ஏறியதும், அவர்கள் காலி மது பாட்டில்களை குடியிருப்பு பகுதிக்குள் தூக்கி எறிந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இதனால் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் கண்ணாடிகள் உடைவது தொடர் கதையாகி வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதால், குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘நெல்சன் சேம்பர்ஸ்’ குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
பழனியப்பா தியேட்டர் இருந்த இடத்தின் பின்னால் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் காலியான மைதானத்தை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கேபிள் கழிவுகள், குப்பைகளை எரிப்பதால் அதில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் குழந்தைகள், பெண்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடிவதில்லை.
இது ஒருபுறம் இருக்க மாலை 6 மணி ஆகிவிட்டாலே குழுவாக அமர்ந்து மது அருந்துவார்கள். போதை உச்சத்துக்கு ஏறியதும் அவர்கள் காலி மது பாட்டில்களை குடியிருப்பு பகுதிக்குள் தூக்கி எறிந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள். போதை கும்பலின் இந்த செயலால் ஜன்னல் கண்ணாடிகள், கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குகின்றன.
சில நேரங்களில் பால்கனியில் நிற்பவர்கள் மீதும் காலி மது பாட்டில்கள் சிதறி விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பயந்துபோய் நாங்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் ஜன்னல்களை மூடிவிடுவது வழக்கம். நிம்மதியாக தூங்கவும் முடிவதில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மைதானத்துக்கு உள்ளே வருவதற்கான வழியை அடைக்கவேண்டும். மேலும் உரிய நடவடிக்கை எடுத்து, இழந்த நிம்மதியை எங்களுக்கு மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக நெல்சன் சேம்பர்ஸ் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story