அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த ஆய்வு கூட்டம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு


அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த ஆய்வு கூட்டம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Oct 2017 4:30 AM IST (Updated: 22 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் விஜயகுமார் எம்.பி. மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்புபணிகளில் சரிவர கவனம் செலுத்தாத அரசு அதிகாரிகள் மீது துறை வாரியான நடவடிக்கைகளை கலெக்டர் எடுத்து வருகிறார்.

இந்தநிலையில், அருமனை பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் இறந்ததை தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், நோய் தீவிர நிலைமை குறித்து விஜயகுமார் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து வசதி, படுக்கை வசதி, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு முறை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றுப்புற தூய்மை பேணப்படுகிறதா?, டெங்கு கொசு உற்பத்தியாக சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு சென்ற அவர், அங்கு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்த உணவின் தரத்தை ருசித்து பார்த்தார்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டோரை சந்தித்து பேசிய அவர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர், டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலைவகித்தார். இதில் விஜயகுமார் எம்.பி. மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது விஜயகுமார் எம்.பி., ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வழங்குவதற்கு போதுமான அளவுக்கு மருந்துகள் உள்ளதா? என்றும் குறைகள் குறித்தும் ஆலோசித்தார்.

இதுதொடர்பாக டீன் கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இதுவரையில் காய்ச்சல் பாதிப்பால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 81 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுள் நேற்று மட்டும், 3 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்றால், மருந்து கடைகளில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல் டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஏனெனில், வலி நிவாரணிகள் தற்சமயத்துக்கு மட்டுமே தீர்வாக இருக்கும். நிரந்தர தீர்வு கிடைக்காது. மேலும், மருந்து கடைகளில் வாங்கி உட்கொள்ளும் வலிநிவாரணிகள் நோய் எதிர்ப்பு சக்தி அணுக்களின் உற்பத்தி எண்ணிக்கையை தடுக்கிறது. எனவே, நோய் பாதிப்பு மீண்டும் வரும்போது அதனால் அதிக பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, டாக்டர்களின் அறிவுரைப்படி பிளேட்டட் ரத்த பரிசோதனை செய்து சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது பரவி வரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கு, வெளியிடங்களில் சிகிச்சைபெற்று ஆபத்தான நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களுள் 19 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பு உள்ள ஒருவருக்கு டெங்கு இருப்பதை உறுதி செய்ய குறைந்தது 5 நாள் அவகாசம் எடுக்கும் நிலை இருப்பதால் நோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டால் நோய்பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, துணை முதல்வர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story