வால்பாறையில் வனத்துறையினரின் முகாம் அலுவலகத்தை சூறையாடிய காட்டு யானைகள்


வால்பாறையில் வனத்துறையினரின் முகாம் அலுவலகத்தை சூறையாடிய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:30 AM IST (Updated: 22 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வனத்துறையினரின் முகாம் அலுவலகத்தை காட்டு யானைகள் சூறையாடின. தொடர்ந்து காட்டு யானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதால் காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் பன்னிமேடு, முக்கோட்டு முடி, ஆனைமுடி, நல்லமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் முக்கோட்டு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் கூட்டம் இரண்டாக பிரிந்து, வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதித்து உள்ளனர்.

இதற்கிடையில் மற்றொரு பிரிவில் உள்ள 9 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் நல்லமுடி எஸ்டேட் 3-வது பிரிவு பகுதியில் அமைந்துள்ள மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரின் முகாமுக்குள் புகுந்தன. அங்குள்ள கதவு, ஜன்னல்களை உடைத்து சூறையாடின. வனத்துறையினரின் கண்முன்னே சூறையாடியதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். இருந்த போதிலும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த யானைகள் நல்லமுடி பூஞ்சோலைப் பகுதிக்கு சென்று முகாமிட்டன.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வால்பாறை வனப்பகுதிகளுக்கு இந்த ஆண்டு அதிகப்படியான காட்டு யானைகள் வரத்தொடங்கி உள்ளதால் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சேதங்களும் ஏற்படுகின்றன. யானைகளின் வருகைக்கு ஏற்றவாறு அவைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு கூடுதல் வனத்துறையினர் வாகனங்களுடன் தேவைப்படுகின்றனர்.

எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அருகில் உள்ள பிற வனசரகங்களில் இருந்து கூடுதல் வேட்டைத்தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தி கூடுதல் வாகன வசதிகளும் செய்துகொடுத்தால் மட்டுமே காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களை தடுக்கமுடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Related Tags :
Next Story