சாங்கிலியில், கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 11 தொழிலாளர்கள் உடல்நசுங்கி சாவு


சாங்கிலியில், கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 11 தொழிலாளர்கள் உடல்நசுங்கி சாவு
x
தினத்தந்தி 22 Oct 2017 5:00 AM IST (Updated: 22 Oct 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

சாங்கிலியில், கிரானைட் கற்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து கர்நாடகத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாங்கிலி,

கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி ஒன்று மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கராட் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் 25 தொழிலாளர்கள் இருந்தனர்.

லாரி நேற்று அதிகாலை 4 மணியளவில் சாங்கிலியில் உள்ள யோகோவாடி கிராம பகுதியில் தஸ்காவ்– கவாத்தே மஹன்கால் நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்குள்ள ஒரு வளைவில் டிரைவர் லாரியை திருப்ப முயன்றார்.

அப்போது துரதிருஷ்டவசமாக லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் லாரிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். கிரானைட் கற்கள் நொறுங்கி சிதறின.

தொழிலாளர்கள் மீது விழுந்தும் அமுக்கின. இதில், உடல் நசுங்கி 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.

இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் கர்நாடக மாநிலத்தின் பிஜாப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story