எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் திரண்டதால் கிருமாம்பாக்கம் செல்லாமல் கவர்னர் பாதியிலேயே திரும்பினார்


எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் திரண்டதால் கிருமாம்பாக்கம் செல்லாமல் கவர்னர் பாதியிலேயே திரும்பினார்
x
தினத்தந்தி 22 Oct 2017 5:00 AM IST (Updated: 22 Oct 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

ஆய்வு செய்யச் சென்ற கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கிராம மக்கள் திரண்டதால் கவர்னர் கிருமாம்பாக்கம் பகுதிக்கு செல்லாமல் பாதியிலேயே கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

பாகூர்,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு காணப்படுகிறது. புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பதவி ஏற்றது முதலே வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது காணப்படும் குறைகளை நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கவர்னரின் இந்த ஆய்வு நடவடிக்கைக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் தொகுதிக்கு கவர்னர் வரும்போது தங்களுக்கு தெரிவிக்காமலேயே வந்து தொகுதியில் ஆய்வு மேற்கொள்வதாக குற்றம்சாட்டினார்கள். முதல்–அமைச்சர் நாராயணசாமியும், கவர்னரின் இந்த ஆய்வு பணிக்கு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கக்கூடாது என முதல்–அமைச்சர் நாராயணசாமியும் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக தொகுதிக்கு ஆய்வுக்கு செல்வது பற்றி எம்.எல்.ஏ.க்களுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் வருவது இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் வார இறுதி நாட்களில் ஆய்வு பணியை தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கும், புதுவை அமைச்சர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு முற்றியுள்ளது. மக்களுக்கான நலத் திட்ட பணிகளுக்கான கோப்புகளில் கவர்னர் கிரண்பெடி கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்புகிறார், அதனால் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று அமைச்சர்கள் புகார் கூறினார்கள். இதில் அமைச்சர் கந்தசாமி, மக்கள் நல திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோடும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். கவர்னரை திரும்பபெற வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

அதற்கு பதில் அளித்த கவர்னர் கிரண்பெடி டெல்லிக்கு செல்லும்முன்பு தன்னை சந்திக்க கவர்னர் மாளிகைக்கு வரும்படியும், வரும்போது தங்கள் மகனையும் அழைத்து வரும்படியும் கூறியிருந்தார்.

அதனால் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் கவர்னர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்த பிரச்சினையில் கவர்னரை கண்டித்தும், அமைச்சர் கந்தசாமிக்கு ஆதரவாகவும் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. இதற்கிடையே அமைச்சர் கந்தசாமியின் தொகுதியான ஏம்பலம் தொகுதியில் ஆய்வு செய்ய கவர்னர் நேற்று அந்த தொகுதிக்கு செல்வதாக தகவல் வெளியானது. இது கந்தசாமியின் ஆதரவாளர்கள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆய்வு செய்ய வரும்போது கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் திட்டமிட்டனர்.

அதனை அறிந்த அமைச்சர் கந்தசாமி தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களை சந்தித்து கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்றுக் காலை முதலாவதாக பாகூர் தொகுதிக்குட்பட்ட கொமந்தான்மேடு அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஆய்வை முடித்துக்கொண்டு அமைச்சர் கந்தசாமியின் தொகுதியான ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள குளத்தையும், நரம்பை கிராமத்தில் ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட திட்டமிட்டார்.

கவர்னர் தங்கள் பகுதிக்கு வர இருப்பதை அறிந்த பிள்ளையார்குப்பம்பேட் பகுதி மக்களும், பிள்ளையார்குப்பம் கிராம மக்களும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்து திரண்டனர். கவர்னரை கண்டித்தும், அவருக்கு எதிராகவும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்தபடி ஆங்காங்கே நின்றனர். மேலும் கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

நரம்பை மீனவ கிராம மக்களும் கவர்னர் வருவதை அறிந்து தங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு எழுதி வைத்திருந்து கவர்னரிடம் கொடுக்க காத்திருந்தனர். ஆனால் கவர்னர் வராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கிராம மக்கள் திரண்டதால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது. இந்த தகவலை அறிந்ததும், கவர்னர் கிரண்பெடி பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் பேட், கிருமாம்பாக்கம், நரம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முடிவை கைவிட்டார். தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். முன்னதாக கவர்னர் அந்த பகுதிகளுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாள் ஆய்வு பணியாக நேற்றுக் காலை முதலாவதாக பாகூர் தொகுதிக்குட்பட்ட கொமந்தான்மேடு தடுப்பு அணைக்கு சென்று ஆய்வு செய்தார். கொமந்தான்மேடு அணைக்கட்டு முழுமையாக கட்டப்படாததாலும், ஏற்கனவே தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளத்தல் கொமந்தான்மேடு தடுப்பணை பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அது சரிசெய்யப்படாததால் பல ஆண்டுகளாக சரிசெய்யப்படாததால் ஆற்றில் வரும் வெள்ளம் வீணாக கடலுக்கு செல்கிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் வந்த மழை நீர், வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது என்று கவர்னருக்கு ஏற்கனவே புகார்கள் வந்திருந்தன. ஆய்வுக்கு கொமந்தான்மேடு அணைக்கு சென்ற கவர்னர், புகார் தெரிவித்த விவசாயிகளை அழைத்து பேசி விளக்கம் கேட்டார்.

அப்பாது விவசாயிகள் மழைநீர் வீணாக கடலுக்கு செல்வதை பற்றி கவர்னரிடம் தெரிவித்தனர். அதையடுத்து கவர்னருடன் வந்திருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

அப்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் கவர்னரிடம், ‘‘தற்போது நபார்டு வங்கி நிதி உதவிமூலம் ரூ.5 கோடி செலவில் 40 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை பாலம் கட்டி பணிமுழுமை செய்யப்படும், இந்த பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து அங்கிருந்த மக்களிடம் கவர்னர் கூறும்போது, ‘‘நான் தற்போது 113–வது ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளேன். இந்த ஆய்வு மூலம் மக்கள் குறைகளை நீக்க நடவடிக்கை எடுக்க முடிகிறது. எனக்கு வரும் புகாரின் அடிப்படையிலேயே ஆய்வுப் பணிக்கு வருகிறேன். உங்கள் புகாரின்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த புகாரை தொடர்ந்து வலியுறத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சண்முக சுந்தரம், செயற் பொறியாளர் தாமரை புகழேந்தி, மாவட்ட துணை கலெக்டர் உதயக்குமார், தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story