புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு ரத்து நாராயணசாமி அறிவிப்பு


புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு ரத்து நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2017 5:15 AM IST (Updated: 22 Oct 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு அரசு பணிந்து புதுவையில் பஸ் கட்டண உயர்வினை ரத்து செய்துள்ளது.

புதுச்சேரி,

எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக்குப்பின் முதல்–அமைச்சர் நாராயணசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

புதுவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 17–ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு 110 சதவீதம் வரை இருந்தது.

குறிப்பாக புதுவையில் இருந்து கடலூர் செல்ல ரூ.11 வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது. திருக்கனூருக்கு (மதகடிப்பட்டு வழியாக) ரூ.14 வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.29 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் விழுப்புரம், திண்டிவனம் போன்ற ஊர்களுக்கு செல்லுவதற்கான பஸ் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 19–ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த கட்டண உயர்வினால் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பஸ்களைவிட புதுச்சேரி பகுதிகளுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கான கட்டணம் உயர்வானது அதிக அளவில் இருந்தது. இதனால் கிராமப்புறத்திலிருந்து நகரப்புறத்துக்கு வேலை நிமித்தமாக வரும் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புதுவையில் ஏற்கனவே வீட்டுவரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பஸ் கட்டண உயர்வு என்பது பொதுமக்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு இலவச சர்க்கரையும் வழங்கப்படாத நிலையில் தீபாவளி தினத்தையொட்டி பஸ்கட்டண உயர்வினை அரசு அறிவித்தது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல் பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கட்டண உயர்வுக்கு எதிராக புதுவையில் ஆங்காங்கே சாலைமறியல்கள், பஸ்கள் சிறைபிடிப்பு சம்பவங்கள் நடந்தன.

அளவுக்கதிகமான கட்டண உயர்வு தொடர்பாக அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் போன் போட்டு கேள்வி கேட்க தொடங்கினார்கள். அரசு மீதான விமர்சனமும் கடுமையாக இருந்தது.

இந்த ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க.வும் கட்டண உயர்வு காரணமாக ஆட்சியாளர்கள் மீது தனது ஆத்திரத்தை எச்சரிக்கையாக வெளிக்காட்டியது. இதுதவிர அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனது கண்டனத்தை வெளியிட்டன.

இத்தகைய எதிர்ப்புகளால் அதிர்ந்துபோன முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று கட்டண உயர்வு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். புதுவை சட்டமன்ற கமிட்டி அறையில் அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், அன்பழகன், சிவா, பாஸ்கர், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போக்குவரத்துத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, ஆணையர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.க்கள், கட்டண உயர்வு தொடர்பாக அதிகாரிகளை கடுமையாக சாடினார்கள். புதுவை அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் செயல்படுவதாக கண்டித்தனர். தமிழகத்தில் அரசு பஸ்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்கூட தெரியாமல் புதுவையில் கட்டணத்தை அதிகாரிகள் நிர்ணயித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்கள்.

இந்த கட்டண உயர்வுக்கு கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்தார்கள். தங்கள் தொகுதிகளிலிருந்து குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று நகர்ப்புறத்திற்கு வரும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கட்டண உயர்வினை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது என்று உறுதியாக தெரிவித்தனர்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் சரமாரியான கேள்விகளுக்கு உரிய விளக்கமான பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள். இறுதியில் கட்டண உயர்வினை ரத்து செய்யவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் பஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் என்னை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் என்னை நேரில் சந்தித்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனால் இப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்துப்பேசி கட்டணம் தொடர்பாக கருத்துகேட்டுள்ளேன். அதனடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் அடங்கிய குழு அமைத்து இன்னும் 3 மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுள்ளேன்.

அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை முன்பு வசூலிக்கப்பட்ட கட்டணமே (பழைய கட்டணம்) அமலில் இருக்கும். இந்த முடிவினை பஸ் உரிமையாளர்களும் ஏற்கவேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

முதல்–அமைச்சர் நாராயணசாமியின் இந்த அறிவிப்பு காரணமாக உயர்த்தப்பட்ட கட்டணம் ரத்தாகிறது. கடந்த 19–ந்தேதிக்கு முன்பு பஸ்களின் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அந்த கட்டணம்தான் இனிமேல் வசூலிக்கப்படும்.


Next Story