மிளகாய் ராணி!


மிளகாய் ராணி!
x
தினத்தந்தி 22 Oct 2017 1:36 PM IST (Updated: 22 Oct 2017 1:36 PM IST)
t-max-icont-min-icon

‘கிளிப்டன் மிளகாய் கிளப்’ இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது. காரமான மிளகாய் செடிகளை வளர்ப்பதுடன், மிளகாய் சாப்பிடும் போட்டிகளையும் நடத்துகிறார்கள்.

‘கிளிப்டன் மிளகாய் கிளப்’ இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது. காரமான மிளகாய் செடிகளை வளர்ப்பதுடன், மிளகாய் சாப்பிடும் போட்டிகளையும் நடத்துகிறார்கள். இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும், மிளகாயின் காரம் அதிகரிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்வது எவ்வளவு பெருமையானதோ, அதேபோல் கடினமானதும்கூட. ஆனால் சிட் பார்பர் என்ற பெண், 2014-ம் ஆண்டிலிருந்தே இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இன்று வரை அவர் தான் சாம்பியன். அதனால் சிட் பார்பரை ‘தோற்கடிக்க முடியாத சிட்’ என்று அழைக்கிறார்கள்.

அதிக காரத்தை சாப்பிடுகிறவர்கள் எல்லாம் இந்தப் போட்டியில் எளிதாக வென்றுவிட முடியும் என்று சொல்லிவிட இயலாது. ரெட் ப்ரெஷ்னோ, ஜலபெனோ என்று அழைக்கப்படும் மிக காரமான மிளகாய் வகைகளை சாப்பிட்டால் மட்டுமே போட்டியின் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியும். இறுதிப் போட்டிக்கு முன்னேறுபவர்களுக்கு உலகிலேயே மிகக் காரமான ‘கரோலினா ரீப்பர்’ மிளகாய்கள் வழங்கப்படும். இதையும் சாப்பிட்டு முடிப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தவகையில் கடந்த 4 ஆண்டுகளிலும் சிட் பார்பரே வெற்றியாளர்.

“இது மிகக் கடினமான போட்டி. மிளகாய் சாப்பிடும்போது காரத்தைத் தாங்க முடியாமல் தண்ணீர் குடித்துவிட்டால், போட்டி யிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். பலரும் காரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டே போட்டியில் பங்கேற்பார்கள். காரத்தைத் தணிக்க பாலைக் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேகமாக மிளகாய்களைச் சாப்பிட்டுவிடுவேன். இந்தப் போட்டி பணத்துக்காகக் கலந்துகொள்ளும் போட்டி இல்லை. 4,500 ரூபாய்தான் பரிசுப் பணம். காரத்தின் பின்விளைவுகளைச் சரி செய்வதற்கே இந்தப் பணம் போதாது. சவால்களை விரும்புகிறவர்களும், வலி தாங்ககூடியவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்துகொள்ள முடியும்” என்கிறார் இந்த மிளகாய் ராணி. 

Next Story