கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 15 பவுன் நகை பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 15 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2017 4:15 AM IST (Updated: 23 Oct 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற ஹெல்மெட் ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் நேர்மை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி லலிதா (வயது 54). நாராயணன் நேற்று மோட்டார் சைக்கிளில் தனது மனைவி லலிதாவுடன் புழுதிவாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

அவரது மோட்டார் சைக்கிள் மாதவரம்–பாடி 200 அடி சாலையில் செந்தில் நகர் அருகே சென்றபோது ஹெல்மெட் அணிந்தபடி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவர்கள் அருகே வந்தனர்.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த லலிதாவின் சேலையை ஹெல்மெட் ஆசாமிகள் பிடித்து இழுத்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து லலிதா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹெல்மெட் ஆசாமிகள் லலிதா அணிந்து இருந்த 15 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த லலிதா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சுபா (45) நேற்று இரவு வீடு அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

* அமைந்தகரையை சேர்ந்த போலீஸ்காரர் ரவி (48) நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் காயம் அடைந்தார்.

* துரைப்பாக்கம் பகுதியில் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ராஜேஷ்கண்ணா (30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

* புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் கஞ்சா விற்றதாக சதீஷ் (28), வசந்தகுமார் (24), ஜன்னத் (19) ஆகிய 3 பேரை பேசின் பாலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* சென்னை முத்தையால்பேட்டை, பெரவள்ளூர், மதுரவாயல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக அஜித்குமார் (22), நாகராஜ் (35) உள்பட 9 பேரை கைது செய்தனர்.

* கோவிலம்பாக்கம் அருகே சாலையில் முந்தி செல்வது தொடர்பாக, மாநகர பஸ் டிரைவர் வெங்கடேசனுக்கும், கார் டிரைவர் பழனி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story