நெல்லை அருகே பஸ்–மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 3 பேர் படுகாயம்


நெல்லை அருகே பஸ்–மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Oct 2017 3:45 AM IST (Updated: 23 Oct 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பஸ்–மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பேட்டை,

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 15 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிள்களில் சுத்தமல்லி தாமிரபரணி ஆற்றில் நேற்று மதியம் குளிக்க சென்றனர். அங்கு குளித்து விட்டு அவர்கள் மாலையில் மோட்டார் சைக்கிள்களில் ஊருக்கு புறப்பட்டனர்.

நெல்லை அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் வரதராஜபெருமாள் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது, எதிரே நெல்லையில் இருந்து திருவேங்கடநாதபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

வாலிபர் பலி

இந்த விபத்தில் மேலப்பாளையம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அன்சார் அலி மகன் சலீம் (வயது 17) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கலீல், ஜாகீர், பர்வேஸ் மு‌ஷரப் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்த அவர்களுடன் வந்த மற்ற வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக சுத்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த கலீல், ஜாகீர், பர்வேஸ் மு‌ஷரப் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சலீம் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story