மதுராந்தகம் அருகே தடுப்புச்சுவரை தாண்டி தாறுமாறாக ஓடிய வேன், ஷேர் ஆட்டோ மீது மோதியதில் 2 பேர் சாவு


மதுராந்தகம் அருகே தடுப்புச்சுவரை தாண்டி தாறுமாறாக ஓடிய வேன், ஷேர் ஆட்டோ மீது மோதியதில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே தடுப்புச்சுவரை தாண்டி தாறுமாறாக ஓடிய வேன், ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டை அடுத்த மலைவையாவூரை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகன் வேம்பரசன் (வயது 35). இவரது உறவினருக்கு சென்னை குரோம்பேட்டையில் நேற்று நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்பதற்காக வேம்பரசன் தனது ஷேர் ஆட்டோவில் சென்றார். அவருடன் மதுராந்தகம் வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்த வெங்கட்ராமன்(42), மதுராந்தகம் தேரடிதெருவை சேர்ந்த நந்தகுமார்(52), அவரது மனைவி பிரமிளா(47) ஆகிய 4 பேர் ஷேர் ஆட்டோவில் சென்றனர். இவர்களில் நந்தகுமாரும், அவரது மனைவி பிரமிளாவும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

சென்னையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் நேற்று இரவு சென்னையில் இருந்து ஷேர் ஆட்டோவில் மதுராந்தகத்துக்கு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலவளம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தறிகெட்டு ஓடிய வேன் நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவரை மோதி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் இருந்த வேம்பரசன், வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஷேர் ஆட்டோவில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர்களான நந்தகுமார், அவரது மனைவி பிரமிளா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தி வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.


Next Story