ஆரணி பகுதியில் தொடர்மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி


ஆரணி பகுதியில் தொடர்மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே தொடர்மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானாள். அவளது தங்கை, தம்பி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் மனைவி சத்யா, மகள்கள் நித்யா (வயது 13), ஆனந்தி (11), மகன் மதியழகன் (10) தந்தை பாக்கியநாதன் (60) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

கடந்த 3 நாட்களாக ஆரணி பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் இவரது குடிசை வீடு வலுவிழந்து காணப்பட்டது. மண் சுவரும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

அப்போது அந்த இடிபாடுகள், தூங்கிக்கொண்டிருந்த நித்யா, ஆனந்தி, மதியழகன் பாக்கியநாதன் ஆகியோர் மீது விழுந்தது. இதனால் அவர்கள் கூக்குரலிட்டனர். இதனையடுத்து வேல்முருகன்-சத்யா ஆகியோர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து வரவழைத்தனர்.

பின்னர் 4 பேரையும் அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த நித்யாவின் உடல்நிலை மோசமானதால் அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். மற்ற 3 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான நித்யா, ஆரணி அருகே கல்பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

மழைக்கு வீடு இடிந்து விழுந்து மாணவி பலியான சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்தை ஆரணி தாசில்தார் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அது குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். 

Related Tags :
Next Story