நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கினார்


நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கினார்
x
தினத்தந்தி 1 Nov 2017 3:45 AM IST (Updated: 1 Nov 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

‘கர்நாடக பிரஜ்ஞாவந்த ஜனதா’ என்ற பெயரில் நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான உபேந்திரா, புதிய கட்சியை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் புதிய கட்சி தொடக்க விழா பெங்களூரு காந்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் பேசிய நடிகர் உபேந்திரா, ‘கர்நாடக பிரஜ்ஞாவந்தர ஜனதா‘ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

‘கர்நாடக பிரஜ்ஞாவந்த ஜனதா‘ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். எங்கள் கட்சிக்கு மேலிடம் இல்லை. எங்களுக்கு மக்கள் தான் மேலிடம். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் எங்களின் நோக்கம். எங்கள் கட்சியை பலப்படுத்த முன்வருபவர்கள் அந்த பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அவர்களே வேட்பாளர்களாக நிற்கட்டும். நான் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன்.

தேர்தலில் நாங்கள் 2, 3 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெறலாம். ஆனால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கர்நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும் ஆலோசித்து ஓட்டுப் போடுங்கள். நம்முடையது மக்கள் கட்சி. தேர்தலில் தனித்து போட்டியிடலாம். எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள தேவை இல்லை.

.மக்களுக்கு தொழிலாளர்களை போல் சேவையாற்றும் நோக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் கட்சியில் சேர முடியும். இதற்காகவே இந்த கட்சியை தொடங்கியுள்ளேன். என்னுடன் கைகோர்த்து செயல்படுங்கள். காங்கிரஸ் உள்பட சில கட்சியினர் நமது கட்சி பற்றி குறைத்து பேசுகிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள். அரசியலில் கெட்டுப்போய் உள்ள வி‌ஷங்களை மாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். இதில் வெற்றி–தோல்வியை பற்றி நான் கவலைப்படவில்லை.

இவ்வாறு உபேந்திரா கூறினார்.


Next Story