மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி அரசு ஊழியர் சாவு ஆசிரியர்கள் 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி அரசு ஊழியர் சாவு ஆசிரியர்கள் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர் பலியானார். 2 ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள கொட்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிகளை முடித்து கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். சுண்டம்பட்டி அருகே சென்ற போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற திருப்பத்தூர் உத்தம்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன்(33), தர்மபுரியைச் சேர்ந்த குமார்(37) ஆகியோர் மீதும் கார் மோதியது.

இந்த விபத்தில் கோவிந்தராஜ், முனியப்பன், குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், குமார் ஆகியோர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story