மசூதிக்குள் புகுந்து மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை மர்ம ஆசாமிகள் வெறிச்செயல்


மசூதிக்குள் புகுந்து மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை மர்ம ஆசாமிகள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:45 AM IST (Updated: 1 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சமியுல்லாகான் (வயது 32). இவர் கெலமங்கலம் செல்லும் சாலையில் உள்ள குந்துமாரனப்பள்ளியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வந்தார். வழக்கமாக இவர் அதிகாலை 4 மணிக்கு தனது வீட்டிற்கு அருகில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக செல்வது வழக்கம். அதேபோல நேற்றும் 4 மணி அளவில் அவர் தொழுகைக்காக மசூதிக்கு சென்றார்.

அவர் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மசூதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சமியுல்லாகானின் கழுத்து பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தொழுகைக்காக சென்றபோது சமியுல்லாகான் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சமியுல்லாகானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட மெக்கானிக் சமியுல்லாகானிற்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். தினமும் இவர் அதிகாலையில் தொழுகை முடித்து, வீட்டிற்கு வந்து பிறகு பட்டறைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதே பகுதியில் திருமணம் ஆகி விவாகரத்தான பெண் ஒருவர் இருந்து வந்துள்ளார்.

அவருடைய வீட்டிற்கு சமியுல்லாகான் அடிக்கடி சென்று வந்ததாகவும், அந்த பெண்ணுக்கும், சமியுல்லாகானுக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் கண்டித்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் சமியுல்லாகான் அந்த பெண்ணின் வீட்டிற்கு தொடர்ந்து சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது சமியுல்லாகானிற்கும் வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து, அதன் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் அருகே மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story