தேனி அருகே பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலி


தேனி அருகே பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 2 Nov 2017 3:30 AM IST (Updated: 2 Nov 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலியானான்.

தேனி,

தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் அன்பரசு. இவருடைய மகன் சித்தார்த் (வயது 3). கடந்த 4 நாட்களாக சித்தார்த் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

அவனுக்கு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் சித்தார்த் இறந்தான். இதனால், அவனுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து சிறுவனின் தாத்தா பால்சாமி கூறுகையில், ‘எனது பேரனுக்கு சாதாரண காய்ச்சல் என்று தான் நினைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் அதிகரித்தது. இதனால், அவனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, செல்லும் வழியிலேயே உயிர் இழந்தான்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இக்கிராமத்தில் பல இடங்களில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நோய் தாக்குதல் மேலும் அதிகரிக்கும் முன்பு இங்கு சுகாதாரத்தை காக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story