புதுச்சேரி ஊழலின் குகையாக உள்ளது கவர்னர் கிரண்பெடி கருத்து
புதுச்சேரி ஊழலின் குகையாக உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
பிரபல நடிகர்கள் புதுவையில் சொகுசு கார்களை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழும்பியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி புதுவை போக்குவரத்துத்துறை அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் நேற்று அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலம் நிதியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க முக்கிய பிரமுகர்களுக்கு குறைவான சாலை வரி விதிக்கவேண்டிய அவசியமென்ன? இதேபோல்தான் பஸ்கள் விவகாரத்திலும் நடந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடமிருந்து இதுதொடர்பாக புகார்கள் வந்திருக்கின்றன. நமக்கு சுத்தமான நிர்வாகம் தேவை.
இதிலும் ஆய்வு நடத்த மத்திய தணிக்கைத்துறை கேட்டுக்கொள்ளப்படும். எல்.ஐ.சி. முகவர்கள் தற்காலிக முகவரிகளை எப்படி ஏற்கிறார்கள்? என்று கேட்கப்படும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நோட்டரி வக்கீல்கள் குறித்து ஆய்வு செய்ய சட்டத்துறை செயலாளரிடம் கேட்டுள்ளேன்.
புதுவை ஊழலின் குகையாக உள்ளது. சமீப காலத்தில் மருத்துவ இடங்கள் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக ஹைமாஸ் விளக்கு அமைத்தது, படகுகள் வாங்கியது ஆகியவற்றிலும் முறைகேடு நடந்துள்ளது. தற்போது புதியதாக சாலை வரி விவகாரத்திலும் நடந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் புதுவைக்கு உடனடியாக ஐகோர்ட்டு கிளையும், சுதந்திரமான விசாரணை அமைப்பும், சி.பி.ஐ. கிளையும் தேவை.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி குறிப்பிட்டுள்ளார்.