டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை கலெக்டர் ரோகிணி வேதனை


டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை கலெக்டர் ரோகிணி வேதனை
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

பலமுறை வேண்டுகோள் விடுத்தும் டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கலெக்டர் ரோகிணி வேதனையுடன் கூறினார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் 25-வது வார்டு ராவனேஸ்வரன் நகர், சித்தகவுண்டர்காடு மற்றும் 27-வது வார்டு சின்னப்பன்தெரு பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களால் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு செய்தார். வீடுகளில் குடிநீர் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பாத்திரங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என ‘டார்ச் லைட்‘ அடித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே, தொழிற் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் தொட்டிகளையும் மற்றும் சுற்றுப்புறங்களையும் சுத்தப்படுத்த 3 நாட்கள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த கெடு முடிந்தும் பல இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததை கலெக்டர் ரோகிணி கண்டறிந்தார்.

இது தொடர்பாக கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

பலமுறை வேண்டுகோள்

டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையடையும் என்பதை கருத்தில் கொண்டு, பலமுறை பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

களப்பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்கும் படியும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை தடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் களப்பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள விடாமலும் பொதுமக்கள் தடுப்பது என களப்பணியாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்களின் பொதுசுகாதார மேம்பாட்டு பணியை கருத்தில் கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக எடுக்கப்படும்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ், லாரி பணிமனைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு அவர்களது வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதற்கு பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டு, தகுந்த அறிவுரை வழங்கி சுத்தம் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பது, அலுவலர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து, சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது செயற்பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் பிரபாகரன், தாய்சேய் நல அலுவலர் சுமதி, உதவி பொறியாளர் திலகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story