கொசு மருந்து அடிக்கும் பணிக்கு 8 நவீன எந்திரங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


கொசு மருந்து அடிக்கும் பணிக்கு 8 நவீன எந்திரங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொள்ள 8 நவீன எந்திரங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி தனியார் காலிமனைகள், குடியிருப்பு பகுதிகள், கட்டுமானபணியிடங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் கொசுப்புழுக்களை உருவாக்கும் வகையில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவு பொருட்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலெக்டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நகராட்சி பகுதியில் டெங்குகாய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாவதை தடுப்பதற்கான ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது நகராட்சி பகுதியில் கொசுமருந்து அடிக்க தேவையான எந்திரங்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொசுமருந்து அடிக்கும் பணியை முழுமையாக மேற்கொள்ள எந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை பயன்படுத்தி கொசு மருந்து அடிக்கும் 8 நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த எந்திரங்களை நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கொசுமருந்து அடிக்க பயன்படும் நவீன எந்திரங்களை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார். தர்மபுரி நகரில் கொசுஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. அப்புணுகவுண்டர், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, கூட்டுறவு சங்க தலைவர்கள் சிவப்பிரகாசம், பழனிச்சாமி, கோவிந்தசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story