சேதமடைந்துள்ள நூலக கட்டிடம் மழையில் புத்தகங்கள் நனைந்து வீணாகும் அவலம்


சேதமடைந்துள்ள நூலக கட்டிடம் மழையில் புத்தகங்கள் நனைந்து வீணாகும் அவலம்
x
தினத்தந்தி 2 Nov 2017 4:30 AM IST (Updated: 2 Nov 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் பகுதியில் நூலக கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பாபநாசம்,

பாபநாசம் மேல வீதியில் இயங்கி வரும் தமிழக அரசு கிளை நூலகம் 1958-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது இயங்கி கொண்டிருக்கும் வாடகை கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மழை நீர் அதிக அளவு நூலகத்துக்குள் விழுகிறது. இதனால் புத்தகங்கள், வாரஇதழ்கள், சிறுவர் இதழ்கள் என அனைத்தும் மழைநீரில் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் கட்டிடத்தின் தன்மை பழமையாக உள்ளதால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த நூலகத்துக்கு வாசகர்கள் வருகை குறைந்து விட்டது.

இந்த நூலக கட்டிடத்தின் பின் கதவுகளை கரையான்கள் அரித்து விட்டதால் நூலகத்தில் உள்ள கணினிகள் மற்றும் புத்தகங்கள் திருட்டு போகும் அபாயம் உள்ளது. இந்த நூலகத்தை இடமாற்றம் செய்வதற்காக பாபநாசம் பேரூராட்சி மீன் மார்க்கெட் அருகில் பொது இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை பாபநாசம் வருவாய் துறையினர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் பெயருக்கு மாற்றித்தர வேண்டும். அப்போது தான் அந்த இடத்தில் புதிய நூலக கட்டிடம் கட்ட முடியும். தஞ்சை மாவட்ட நூலக ஆணைக்குழு பாபநாசம் கிளை நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி உள்ளது. எனவே பாபநாசம் நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story