தலையில் அம்மிக்கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை விபத்து என நாடகமாடி தப்ப முயன்ற கள்ளக்காதலி கைது


தலையில் அம்மிக்கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை விபத்து என நாடகமாடி தப்ப முயன்ற கள்ளக்காதலி கைது
x
தினத்தந்தி 2 Nov 2017 4:45 AM IST (Updated: 2 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே தலையில் கல்லைப்போட்டு லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதனை விபத்து எனக் கூறி தப்ப முயன்ற கள்ளக்காதலி கணவனுடன் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலன் (வயது 40). லாரி டிரைவர். இவரது அக்காள் லோகேஸ்வரி குடியாத்தத்தை அடுத்த பாக்கம் செல்வபெருமாள் நகரில் கணவர் சவுந்தர்ராஜனுடன் வசிக்கிறார். சமீபத்தில் புதிய லாரி ஒன்றை சவுந்தர்ராஜன் வாங்கினார். அந்த லாரியில் வேலன் அடிக்கடி டிரைவராக செல்வார். இதனையொட்டி வேலன் அடிக்கடி பாக்கத்திற்கு வருவது வழக்கம்.

அப்போது அவருக்கும் அதே ஊரில் உள்ள லாரி டிரைவர் சசிகுமார் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது வீட்டிற்கு வேலன் அடிக்கடி சென்றபோது சசிகுமாரின் மனைவி நிர்மலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. நேற்று முன்தினம் இரவு வேலன் அவரது வீட்டிற்கு சென்று நிர்மலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வெளியே சென்றிருந்த சசிகுமார் வீடு திரும்பியபோது அவருக்கும் வேலனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலன் கணவன், மனைவி இருவரையும் தாக்கினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். தங்களை தாக்கியதால் சசிகுமாரும், நிர்மலாவும் ஆத்திரத்துடன் இருந்தனர். சற்று நேரத்தில் வேலன் அங்கு திரும்பி வந்தார். இரவு சாப்பிட்டபின் அவர் அங்கேயே படுத்து தூங்கினார்.

அப்போது சசிகுமாரும் நிர்மலாவும் அம்மிக்கல்லை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த வேலன் தலையில் போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் வேலன் அலறினார். சிறிது நேரத்தில் அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தார். உடனே கணவனும், மனைவியும் இதனை மறைக்க திட்டமிட்டு வேலனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டரிடம், பாக்கம் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர். டாக்டர் பரிசோதித்தபோது வேலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையிலிருந்து குடியாத்தம் போலீசாரை தொடர்பு கொண்டு பாக்கம் அருகே நடந்த விபத்தில் வேலன் என்பவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது இரவு பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பாக்கம் பகுதிக்கு சென்று பார்த்தார். ஆனால் விபத்து நடந்ததற்கான சுவடுகளே இல்லை. அந்த பகுதியில் விசாரித்தபோது எந்த விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அங்கிருந்த நிர்மலாவிடம் விசாரித்தார்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதனையடுத்து சசிக்குமார் வீட்டிற்கு சந்தேகத்தின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சென்றபோது அங்கு பூட்டியிருந்த அவரது வீட்டின் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. எனவே வேலனை இவர்கள் கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வரவே மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

கொலை நடந்த இடம் பரதராமி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்குள்ள போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தலைமறைவான நிர்மலா மற்றும் அவரது கணவர் சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வேலனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி இருக்கும்போது வேறொருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால் லாரி டிரைவர் வேலன் கொலை செய்யப்பட்டார். இதனால் அவரது மனைவி, குழந்தைகள் நிர்கதியாய் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கைதான நிர்மலா-சசிகுமாருக்கு ஒரு மகன் உள்ளான். பெற்றோர் கைதானதால் இவர்களது மகனும் அனாதையாகி விட்டான். விபத்து என இவர்கள் நாடகமாடிய நிலையில் திறம்பட செயல்பட்டு கொலையை உறுதி செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்த குடியாத்தம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் உயர் அதிகாரிகளும், சக போலீசாரும் பாராட்டினர்.

கள்ளக்காதலி வீட்டில் லாரி டிரைவர் வேலன் கொலை செய்யப்பட்டதும், அதனை விபத்து எனக்கூறி நாடகமாடி தப்பிக்க முயன்ற கணவன்-மனைவி கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story