கன்னட ராஜ்யோத்சவா விழா கன்னடர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் மந்திரி சீதாராம் பேச்சு


கன்னட ராஜ்யோத்சவா விழா கன்னடர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் மந்திரி சீதாராம் பேச்சு
x
தினத்தந்தி 2 Nov 2017 3:38 AM IST (Updated: 2 Nov 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

கன்னடர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று மடிகேரியில் நடந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவில் மந்திரி சீதாராம் பேசினார்.

குடகு,

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள ஜெனரல் திம்மையா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கன்னட ராஜ்யோத்சவா விழா நடந்தது.

விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான சீதாராம் கலந்து கொண்டு தேசியக்கொடி மற்றும் கன்னட கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கன்னட மொழிக்காக பலர் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்கள் அரும்பாடுபட்டு கன்னட மொழியை முன்னுக்கு கொண்டு வந்துள்ளனர். படிப்பு, பேச்சு வழக்கு என எல்லாவற்றிலும் கன்னட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து கன்னட மொழிக்கென்று நாட்டில் ஒரு இடத்தை பெற்றுத்தந்துள்ளனர்.

அவர்களுடைய வழியில் நாமும் சென்று கன்னட மொழியை காக்க வேண்டும். வாழ்க்கையிலும் முன்னுக்கு செல்ல வேண்டும். கர்நாடகத்தில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் பலர் வசித்து வருகிறார்கள். அவர்களும் கன்னடர்கள்தான். ஆனால் அவர்கள் கன்னடர்கள் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. கன்னட மொழியை விரைவில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாநில அரசு, கன்னட மொழியை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கது. ‘‘நம் மொழி, நம் நாடு’’ என்பதுபோல் கன்னடர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். மொழியையும், கர்நாடகத்தையும் காப்பாற்ற வேண்டும்.

மாநில அரசு, மாநிலம் முழுவதும் இந்திரா மலிவு விலை உணவகத்தை திறந்து வருகிறது. இதன்மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் மக்களின் நலனுக்காக சித்தராமையா தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில் குறிப்பாக ‘‘அன்ன பாக்யா’’ திட்டத்தை சொல்லலாம். இந்த திட்டத்தின் மூலம் பி.பி.எல். ரே‌ஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அன்ன பாக்ய திட்டத்தின் மூலம் குடகு மாவட்டத்தில் மட்டும் 91,512 குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொருவரும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்பதே மாநில அரசின் கனவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story