புலி உருவில் ஓர் பூனை
‘ஐஸ் ஏஜ்’ படத்தில் வரும் ‘டியாகோ’ எனப்படும் கோரைப் பல் புலி, 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் உலா வந்துள்ளது.
புலி என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது புலி இல்லை. ‘சாபர் டூத் டைகர்’ எனப்படும் பூனை இனம். ஆமாங்க..! கொஞ்சம் பெரிய அளவிலான பூனை. இந்த வகை பூனைகள் கிட்டத்தட்ட சிங்கம் அளவிற்கு பெரிதாகவும், குண்டாகவும் இருக்கும்.
ஒரு சில கோரைப் பல் புலிகள் 15 அடி நீளம் வரை இருக்குமாம். ஆனால் இவற்றால் புலிகளைப் போல வேகமாக ஓட முடியாது. அதனால் வேகமாக ஓடும் சிறிய மிருகங்கள், இதற்கு சுலபமாக “அல்வா” கொடுத்துவிடும். இதன் தொண்டையில் ஒரு விசேஷ எலும்பு இருப்பதால், இவற்றால் சிங்கத்தைப் போல கர்ஜிக்க முடியும். அத்துடன் மிக தொலைவில் இருக்கும் தனது சகாக்களுடன் கர்ஜனை மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்த எலும்பு உதவும்.
இதன் பலமே கடைவாய் பகுதியில் காட்சியளிக்கும் கோரைப் பல் தான். வாயின் இரண்டு பக்கமும் சுமார் 7 அங்குலம் நீளத்திற்கு பயங்கரமாக இரண்டு பற்கள் இருக்கும். இதை இந்த பூனைகள் கத்தி மாதிரி பயன் படுத்துகின்றன. காட்டெருமை, மான், குதிரை என பெரிய விலங்குகளின் கழுத்து அல்லது வயிற்றுப் பகுதியில் இந்த பற்களால் ஆழமாக குத்தி கிழித்துவிடும். அந்த பயங்கர கத்திக் குத்தில் பிடிபட்ட விலங்கு இறந்ததும், ஏதாவது புதருக்குள் இழுத்து சென்று உண்ணுமாம்.
கோரைப் பல் புலிகள் ஆரம்பத்தில் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் தான் சுற்றிக் கொண்டிருந்தன. பின்னர் மெல்ல மெல்ல அமெரிக்க கண்டத்திற்கும் பயணப்பட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் கோரைப் பல் புலியின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பருவ நிலை மாற்றமும், மனிதர்களின் கைவரிசையும் இவை அழிந்து போனதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவை சின்னச் சின்ன மிருகங்களை வேட்டையாட முடியாது என்பதால், பெரிய விலங்குகளை நம்பியே வாழ்ந்து வந்தன. அந்த பெரிய விலங்குகளும் பூமியில் இருந்து மறைந்துவிட்டதால், பசிக் கொடுமையாலேயே இவற்றில் பாதி அழிந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எது எப்படியோ, உண்மையில் உலா வந்து கொண்டிருந்த ஒரு உயிரினத்தை அழித்துவிட்டு, அனிமேஷனில் அதனை திரையில் உலவ விட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
Related Tags :
Next Story