நெல்லை மாவட்டத்தில் 125 இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


நெல்லை மாவட்டத்தில் 125 இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2017 3:00 AM IST (Updated: 2 Nov 2017 7:33 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள 125 இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள 125 இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நெல்லை டவுன், பேட்டை உள்பட மாநகர பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

39 மில்லி மீட்டர் மழை

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை நெல்லை, பேட்டை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நெல்லையில் 13 இடங்களில் மொத்தம் 514 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.

இதனால் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கி உள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றவும், கூடுதல் மழை பெய்தாலும் உடனடியாக மழைநீர் வடியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரிடர் மீட்பு குழுக்கள்

நெல்லை மாவட்டத்தில் 125 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோடி, மாநகர நல அலுவலர் பொற்செல்வன், நெல்லை மண்டல உதவி ஆணையாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், தாசில்தார் கணேசன், உதவி பொறியாளர் அருள், சுகாதார அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story