மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்


மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:15 AM IST (Updated: 3 Nov 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு திடலில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மையங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் குழு விளையாட்டு போட்டிகளாக இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், எறிப்பந்து, கபடி போன்றவை நடைபெற்றது.

அதேபோல் கை, கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டங்கள், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி போன்றவையும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர், 100 மீட்டர், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல் போன்றவையும் நடைபெற்றது.

காது கேளாதோருக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.

இந்த போட்டிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் போட்டிகளில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளை பாராட்டி பேசினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கந்தசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story