கடலூர் நகரில் மழைநீர் தேங்கியிருந்த குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்


கடலூர் நகரில் மழைநீர் தேங்கியிருந்த குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 2 Nov 2017 10:45 PM GMT (Updated: 2 Nov 2017 7:27 PM GMT)

கடலூர் நகரில் மழைநீர் தேங்கியிருந்த குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார். உடனடியாக வடியவைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கடலூர்,

கடலூர் நகரில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாலையில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளிலும், காலி மனைகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி உள்ளது. வடிகால் வசதி இல்லாத இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து தேங்கி நின்றது.

மஞ்சக்குப்பம் ராமசாமி நகர், துரைசாமி நகர் உள்ளிட்ட இடங்களில் ஒருசில வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. மேலும் நகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று கடலூர் நகரில் போலீஸ் குடியிருப்பு, நேருநகர், ஆனைக்குப்பம், மாருதிநகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ் குடியிருப்பு மற்றும் நேருநகரில் காலிமனைகளில் தேங்கியிருந்த மழைநீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, வாய்க்கால் வெட்டி மழைநீரை வடிய வைத்தனர். இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தாசில்தார் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீசுடன் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அதிகாரிகள் கிளப் மற்றும் இறகுபந்து மைதானம், டென்னிஸ் மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதிகாரிகள் கிளப் எப்போது கட்டப்பட்டது?, யார்-யார் பயன்படுத்துகிறார்கள்?, கிளப் கட்டிடம் ஏதும் பழுதடைந்துள்ளதா? என்று கட்டிட பராமரிப்பாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் நகரில் ஏராளமான அரசு கட்டிடங்கள் உள்ளன. அவற்றை பார்வையிட்டு வருகிறேன். பழைய கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே கருவூலத்துறைக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வனத்துறைக்கும் இடம் ஒதுக்கிக்கொடுத்து உள்ளோம். மேலும் இங்கு அரசு அருங்காட்சியகத்தை கொண்டு வருவது பற்றியும் பரிசீலித்து வருகிறோம் என்றார். 

Related Tags :
Next Story