எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி விவரங்களை 20–ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி விவரங்களை 20–ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:00 AM IST (Updated: 3 Nov 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவி குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் வருகிற 20–ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:–

கோவையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 3–ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் முதல்–அமைச்சர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக துறை சார்ந்த நலத்திட்ட உதவி விவரங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயனாளிகள் முடிவு செய்யப்பட்ட இறுதி பட்டியல் மற்றும் நலத்திட்ட உதவி குறித்த விவரங்களை வருகிற 20–ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், தங்களது துறைகளின் சார்பில் தொடங்க வேண்டிய புதிய திட்டங்கள், கட்டிடப்பணிகளின் விவரத்தினையும் எனது (கலெக்டர்) கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

விழா நடைபெறும் நாளன்று பொதுமக்கள் வந்து செல்லும் வகையிலும், பயனாளிகள் அழைத்து வரும் வகையிலும் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். போலீசார் ஒதுக்கிய இடங்களில் பஸ்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்களை முன்னரே தெரியப்படுத்தி, அதற்கான வழிகளை அறிவித்திட வேண்டும். பொதுப்பணித்துறையினர் விழா மேடை அமைத்தல், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அமர இருக்கைகள் தயார் படுத்துதல் பணிகளையும், விழா மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகள் நலத்திட்ட உதவிகளின் மாதிரிகளை தயார் செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story