ராய்ச்சூரில், தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கில் நடிகை பூஜாகாந்தி கோர்ட்டில் ஆஜர்


ராய்ச்சூரில், தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கில் நடிகை பூஜாகாந்தி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 3 Nov 2017 3:00 AM IST (Updated: 3 Nov 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கில் ராய்ச்சூர் கோர்ட்டில் நேற்று நடிகை பூஜாகாந்தி நேரில் ஆஜரானார்.

ராய்ச்சூர்,

தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கில் ராய்ச்சூர் கோர்ட்டில் நேற்று நடிகை பூஜாகாந்தி நேரில் ஆஜரானார். விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகை பூஜாகாந்தி மீது வழக்கு


கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பூஜாகாந்தி. இவர், கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராய்ச்சூர் புறநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் நடிகை பூஜாகாந்தி தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரசார வாகனத்தை பயன்படுத்தியதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி விட்டதாகவும் சதர் பஜார் போலீஸ் நிலையத்தில், பூஜாகாந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தற்போது ராய்ச்சூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி பூஜாகாந்திக்கு பலமுறை நோட்டீசு அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மாதம் (அக்டோபர்) 26-ந் தேதி பூஜாகாந்தியை போலீசார் கைது செய்ததுடன், கோர்ட்டில் ஆஜர்படுத்த தாமதமானது. இதனால் நடிகை பூஜாகாந்தியை 6 மணிநேரம் கோர்ட்டு காவலில் வைக்கும்படியும், ரூ.50 ஆயிரம் செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட்டிலேயே 6 மணிநேரம் நடிகை பூஜாகாந்தி சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர், ரூ.50 ஆயிரம் செலுத்தி ஜாமீனில் வந்தார்.

கோர்ட்டில் ஆஜர்

நடிகை பூஜாகாந்தி தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கு ராய்ச்சூர் கோர்ட்டில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிபதி முன்பு நடிகை பூஜாகாந்தி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட்டில் இருந்து நடிகை பூஜாகாந்தி புறப்பட்டு சென்றார். முன்னதாக கடந்த முறை கோர்ட்டில் ஆஜராக தாமதம் ஆனதால் நேற்று காலையிலேயே கோர்ட்டுக்கு நடிகை பூஜாகாந்தி வந்திருந்தார். வழக்கு விசாரணை மதியம் 3 மணிக்கு வர இருந்ததால், கோர்ட்டு அருகே உள்ள சில கிராமங்களுக்கு அவர் சென்றார்.

அப்போது நடிகை பூஜாகாந்தி நிருபர்களிடம் கூறுகையில், “என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் இருந்து மீண்டு நிரபராதியாக வெளியே வருவேன். ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை. தேர்தல் விதிமுறைகளையும் மீறவில்லை” என்றார். 

Next Story