ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியரை கொன்று நகை-பணம் கொள்ளை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியரை கொன்று நகை-பணம் கொள்ளை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 3 Nov 2017 2:15 AM IST (Updated: 3 Nov 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியரை கொன்று நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு,

ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியரை கொன்று நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

கொலை-கொள்ளை

பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்தவர் நரசிம்மன். இவருடைய மனைவி சந்திரா(வயது 75). இவர்கள் 2 பேரும் அரசு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவார்கள். நரசிம்மன் இறந்துபோனதால், சந்திரா தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார். இவருடைய வீட்டில் உள்ள பழுதடைந்த தண்ணீர் குழாய்களை சரிசெய்ய அடிக்கடி ராமசந்திரா(38) என்ற தொழிலாளி வந்து சென்றார்.

சம்பவத்தன்று தண்ணீர் குழாய்களை சரிசெய்ய வந்த ராமசந்திரா, சந்திராவின் கழுத்தை நெரித்து கொன்றார். மேலும், வீட்டில் இருந்த அவருடைய 2 மகள்களை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டார். இந்த சம்பவம் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி நடந்தது. தாக்குதலில் காயமடைந்த சந்திராவின் மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து ஜெயநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராமசந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு 69-வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி ராமலிங்ககவுடா தீர்ப்பு கூறினார். அப்போது, சந்திராவை கொன்றுவிட்டு, அவருடைய 2 மகள்களை கொலை செய்ய முயன்று பணம், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற ராமசந்திராவிற்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story