யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடியே தீரும் பரமேஸ்வர் திட்டவட்டம்


யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடியே தீரும் பரமேஸ்வர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2017 3:00 AM IST (Updated: 3 Nov 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடியே தீரும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் திட்டவட்டமாக கூறினார்.

குடகு,

யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடியே தீரும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் திட்டவட்டமாக கூறினார்.

காங்கிரஸ் கட்சி கூட்டம்

குடகு மாவட்டம் மடிகேரியில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தொடங்கி வைத்தார். அவருக்கு குடகு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மாவட்ட பொறுப்பு மந்திரியும், திட்டம் மற்றும் புள்ளியல் துறை மந்திரியுமான சீதாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் வேணுகோபால் பேசியதாவது:-

நிம்மதியை இழந்துவிட்டனர்

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மக்கள் சந்தோஷமாக இருந்தனர். மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு வந்த பிறகு, உயர் மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து நாட்டை சீரழித்து விட்டனர். சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வந்து, அவர்கள் லாபம் பார்த்து கொண்டனர்.

கருப்பு பணத்தை வெளியே கொண்டுவருவதாக கூறி மக்களை ஏமாற்றிவிட்டனர். தற்போது நாட்டு மக்கள் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள். மக்கள் பல பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார்கள். நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சமாதானமும், தைரியமும் கொடுத்து, அவர்களை முன்னுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும்.

மக்கள் காங்கிரசை நம்பி உள்ளனர்

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு பூத் அளவிலும் உள்ள வீடுகளுக்கும் சென்று காங்கிரஸ் அரசின் சாதனைகளை தெரியப்படுத்த வேண்டும். அரசின் சலுகைகள் கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பா.ஜனதாவினர் மதத்தின் பெயரில் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை. இதனால் மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்பி உள்ளனர். அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேசியதாவது:-

திப்பு ஜெயந்தியை மாநில அரசு...

திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடுவதற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடியே தீரும். இது அரசு நிகழ்ச்சி. இதனை பா.ஜனதா எதிர்ப்பது சரியல்ல. அனைத்து தலைவர்களின் பிறந்த நாளும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் சமயத்தில், திப்பு சுல்தான் முஸ்லிம் என்ற காரணத்திற்காக பா.ஜனதாவினர் திப்பு ஜெயந்தியை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் மக்களின் விரோதமாக செயல்பட்டு வரும் பா.ஜனதாவை பார்த்து காங்கிரஸ் பயப்பட வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் கட்சியில் அனைத்து மத மக்களும் உள்ளனர்.

குடகு மாவட்டத்தில் திப்பு ஜெயந்தி மாநில அரசு சார்பில் கொண்டாடப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. முன்பு கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, மாநில அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது. ஜெகதீஷ் ஷெட்டர், எடியூரப்பா, ஆர்.அசோக், ஷோபா ஆகியோர் திப்புவின் புகழ் பாடினார்கள். ஆனால், தற்போது காங்கிரஸ் அரசு கொண்டாடும் போது அதனை எதிர்க்கிறார்கள். இதில் இருந்தே பா.ஜனதாவின் எண்ணங்கள் மக்களுக்கு தெளிவாக புரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மடிகேரி பகுதியில் கட்டப்பட உள்ள புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பரமேஸ்வர் அடிக்கல் நாட்டினார். 

Next Story