நிதி நேர்மையாக செலவிடப்படுகிறதா? என்பதை ஒவ்வொரு துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும்


நிதி நேர்மையாக செலவிடப்படுகிறதா? என்பதை ஒவ்வொரு துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

நிதி நேர்மையாக செல விடப்படுகிறதா? என்பதை ஒவ்வொரு துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

நான் உங்களுடன் 16 மாதங்களாக பணிபுரிந்து வருகிறேன். மேலாண்மை மற்றும் தலைமை செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு தொடர்ந்து உங்களை வலியுறுத்தி வந்திருக்கிறேன். இதில் சில பேர் மட்டுமே இச்செயல்களை நடைமுறைப்படுத்துவதால் குறைந்த அளவே சாதிக்க முடிந்துள்ளது. சமீபத்தில் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் கடைநிலை குடிமகனுக்கும் பலன் கிடைக்கவே நாம் நியமிக்கப்படுகிறோம் என்ற உணர்வு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

நமது மக்களின் எதிர்பார்ப்பையும் நமது தலைமை பொறுப்பினையும் உறுதி செய்ய சில முக்கியமான செயல்பாடுகளை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உங்களின் பெரும்பாலானோர் பல பதவிகளையும், துறைகளையும் நிர்வகிக்கிறீர்கள். எனவே தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு கூட்டத்தை தவறாமல் கூட்டி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் சரியாக, முறையாக நடக்கின்றனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கூட்டத்திலும் நடந்த தொடர் நிகழ்ச்சிகளை உங்கள்கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் தத்தமது பொறுப்புகளை அறியுமாறு செய்யுங்கள்.

மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சிகளை குறித்த நேரத்தில் நடத்தி அதைத்தொடர்ந்து கண்காணித்து அவர்களின் குறைகளை முறையாக ஆவணப்படுத்துங்கள். அப்போதுதான் அவர்களின் குறைகளை கண்காணிக்க ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு கோப்பும் உங்களின் உடமை. ஆதலால் அதன் பயணத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு.

எனவே அதை கண்காணிப்பதை உறுதி செய்யுங்கள். இன்னும் சில கோப்புகள் கவர்னர் அலுவலகத்துக்கு பல மாதங்கள் தாமதித்தே அனுப்பப்படுகின்றன. இதுபற்றிக்கூட நான் சென்ற மாதம் அளித்த எனது செய்தியில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளேன். உங்களில் பலர் போதுமான களப்பயணங்களை இன்னும் மேற்கொள்ளவில்லை. களப்பயணம் மேற்கொள்வதால் நீங்கள் மக்களோடு மக்களாக இணைந்து இருப்பீர்கள்.

கடைசி குடிமகனும் உங்களோடு இணைந்திருக்க நீங்கள் கிராமப்புறங்களுக்கு கட்டாயம் அதை ஒரு பயணமாக மேற்கொள்ளுங்கள். மேலும் அங்கு புதுவை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? பயனாளிகள் அவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்திருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளுங்கள்.

சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை, டெங்கு காய்ச்சல் போன்ற சில நிகழ்வுகளை நாம் காலதாமதமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொரு துறைக்கும் சிறந்த பணியாளர்கள் நிர்வாகம் தேவைப்படுகிறது. இவற்றை உங்களின் துறைகளின் நிலையிலேயே ஆய்வு செய்யலாம். இந்த வருட இறுதிக்குள் எந்தெந்த துறைகளில் யார், யாருக்கு பதவி உயர்வு தேவைப்படுகிறது? என்பது குறித்து முடிவு செய்வோம்.

புதுவையில் கடுமையான நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. எனவே ஒவ்வொரு துறைத்தலைவரும் எல்லா நிதியும் தேவைப்படும் இடத்தில் முறையாக, நேர்மையாக செலவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யவேண்டும். திட்டங்கள் அனைத்தும் காலதாமதமின்றி நிறைவேற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் நாம் அதிக செலவினங்களை தவிர்க்க முடியும். நமது அனைத்து செயல்களிலும் நேர்மையும், ஒருங்கிணைப்பும் மிக அவசியம்.

இவ்வாறு அதில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். 

Next Story