வாகன சோதனையால் ஏற்பட்ட தாமதத்தால் விவசாயி இறந்ததாக புகார் போலீஸ் நிலையம் முற்றுகை


வாகன சோதனையால் ஏற்பட்ட தாமதத்தால் விவசாயி இறந்ததாக புகார் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 3 Nov 2017 10:38 AM IST (Updated: 3 Nov 2017 10:38 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே போலீசார் வாகன சோதனையின் போது தாமதம் செய்ததால் விவசாயி உரிய சிகிச்சை பெற முடியாமல் இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயியான இவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு மினி வேனில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக உறவினர்களால் கொண்டு வரப்பட்டார். அப்போது மல்லாங்கிணறு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐசக்ராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். விவசாயி ராஜேந்திரன் வந்த வேனையும் நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டது.

இறந்தார்

அதன் பின்னர் உறவினர்கள் வலியுறுத்தியதன் பேரில் போலீசார் மினி வேனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் விவசாயி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் விவசாயி ராஜேந்திரனை சிகிச்சைக்கு முன்கூட்டியே கொண்டு வந்து இருந்தால் அவரை காப்பாற்ற வாய்ப்பு இருந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

முற்றுகை

எனவே வாகன சோதனை என்ற பெயரில் ராஜேந்திரன் வந்த மினி வேனை காலதாமதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்லாங்கிணறு போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தியதன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐசக்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்லாங்கிணறு போலீசில் இறந்த விவசாயி ராஜேந்திரனின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story