குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நிலுவைத்தொகை ரூ.35 கோடியை வழங்க வலியுறுத்தி குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2017–18–ம் ஆண்டிற்கு அரவை பணி தொடங்க உள்ளதையொட்டி அனல்கோல் விழா நேற்று நடந்தது. இதில் ஆலை பணியாளர்கள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் தலைமை நிர்வாகி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை நிர்வாகி மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட கரும்பு விவசாயிகள், ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கரும்புக்கு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.35 கோடியை இந்த ஆண்டு அரவை பணி தொடங்குவதற்கு முன்பு வழங்க வேண்டும். 2017–18–ம் ஆண்டிற்கு ஒரு டன் கரும்புக்கான விலையை ரூ.4 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் ஆலை வளாகத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் திருப்பதி வாண்டையார், பொருளாளர் அர்ச்சுனன், நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, விஜயகுமார், கோவிந்தராஜ், சின்னத்துரை, பொன்ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கரும்பு விவசாயிகள் சிலர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கரும்பு டன்னுக்கு பரிந்துரை விலையுடன் ரூ.2 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகமோ டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மட்டுமே வழங்கியுள்ளது. 2015–16, 2016–17–ம் ஆண்டுகளில் விவசாயிகள் வெட்டி அரவைக்கு அனுப்பிய கரும்புக்கு அரசு பரிந்துரை செய்த டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் 2 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை இந்த ஆண்டு அரவை பணி தொடங்குவதற்கு முன்னதாக வழங்க வேண்டும். இல்லையென்றால் இந்த ஆண்டு நாங்கள் கரும்புகளை அறுவடை செய்யமாட்டோம்.
அப்படியே அறுவடை செய்தாலும் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல் வேறொரு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைப்போம். அடுத்த ஆண்டு முதல் கரும்பு சாகுபடி செய்யமாட்டோம். இந்த ஆண்டு அரவை பணி தொடங்குவதற்கு முன்பு கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும். ஏற்கனவே தலைஞாயிறு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையை மூடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் குருங்குளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முயற்சி மேற்கொள்வதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து வரும் தமிழகஅரசு, அந்த தொகையை வைத்து கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.