சாயல்குடி, கடலாடி பகுதிகளில் ரே‌ஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை


சாயல்குடி, கடலாடி பகுதிகளில் ரே‌ஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2017 3:30 AM IST (Updated: 3 Nov 2017 11:24 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி, கடலாடி ரே‌ஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாயல்குடி,

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின்கீழ் அரிசி, சீனி, மண்எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதலாக சாயல்குடி மற்றும் கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மண்எண்ணெய் 1½ லிட்டருக்கு விலை ரூ.25 பெற்றுக்கொண்டு நுகர்வோருக்கு ரூ.21.30 என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஒரு பாக்கெட் எண்ணெய் விலை ரூ.25–க்கு பதிலாக ரூ.30–ம், 1 கிலோ சீனிக்கு ரூ.13.50–க்கு பதிலாக ரூ.18 வாங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் புழுங்கல் அரிசியை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்றுவிட்டு தரமற்ற பச்சரிசியை கார்டுதாரர்களுக்கு வழங்குகின்றனர். கார்டுகளில் முறைகேடாக பதிவு செய்கின்றனர். மேலும் வெளியூரில் உள்ளவர்களின் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கியதாக கணக்குகள் எழுதியும் ரே‌ஷன் பொருட்களை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் ரே‌ஷன் பொருட்கள் அல்லாத தரமற்ற மஞ்சள்பொடி, மல்லிப்பொடி, சாம்பார் பொடி மற்றும் சோப்பு வகைகளை வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். பாமாயில், துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகள் ரே‌ஷன் கடைகளில் பெரும்பாலானோருக்கு வினியோகிப்பதே இல்லை. இதுகுறித்து ரே‌ஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டால் இப்பொருட்கள் போதிய அளவு ரே‌ஷன்கடைகளுக்கு வருவதில்லை என கூறுகின்றனர்.

ஒருசில நாட்கள் மட்டுமே ரே‌ஷன் கடைகள் திறப்பதால் அன்றைய தினம் வெளியூர் சென்றவர்கள் மற்றும் வேலைக்கு சென்றவர்களால் ரே‌ஷன் பொருட்கள் வாங்க முடிவதில்லை. அவ்வாறு பொருட்கள் வாங்கினாலும் எடை மற்றும் அளவு குறைவாக உள்ளது. இதுகுறித்து விற்பனையாளர்களிடம் கேட்டால் 50 கிலோ எடையுள்ள சீனி மூடையில் 2 கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளது என்றும் இதுபோன்று அரிசி மற்றும் மண்எண்ணெய்யின் அளவு குறைவாக அனுப்பப்படுவதால் பொதுமக்களுக்கு வழங்கும்போது எடை குறைவாக வழங்குவதாக கோபத்துடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ரே‌ஷன் கடைகள் வேலை நாட்கள் முழுவதும் திறந்திருக்கச் செய்வதுடன் அத்தியாவசியப் பொருட்கள் உரிய விலையில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story