மிகவும் பழமையான அரசு கட்டி டங்களின் உறுதி தன்மை பற்றி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் கலெக்டர் உத்தரவு
மிகவும் பழமையான அரசு கட்டிடங்களின் உறுதி தன்மை பற்றி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டு உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
அப்போது கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:–
பொதுப்பணித்துறையினர் கடந்த காலங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் சாலையின் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வெள்ளசேதம் ஏற்படாமல் தடுப்பதோடு சாலையோரங்களில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையினர் வெள்ள பாதிப்பால் ஏற்படும் கால்நடை இறப்புகளுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நோய் தடுப்பு முன்னெரிச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
மின்சாரத்துறையினர் மழைக்காலங்களில் சேதம் ஏற்படும் மின்கம்பங்களை கண்டறிந்து சீரமைக்க வேண்டும். தீயணைப்புத்துறையினர் போதிய அளவு மீட்பு மற்றும் தடுப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு அருகிலுள்ள பள்ளிகளை தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் பொறுப்பு அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும். துறை தலைமை அலுவலர்கள் விடுப்பு எடுக்கவோ, தலைமையிடத்தை விட்டு செல்லவோ கூடாது. இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுடைய துறை சார்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்த வேண்டும்.
மிகவும் பழமைவாய்ந்த அனைத்து அரசுத்துறை அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை, பள்ளி கட்டிடங்கள், சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து விரைவாக ஒருவார காலத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் பழைமையான கட்டிடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுமதிபெற்று அப்புறப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டு மழை வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தந்த பகுதிகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேஷ், உதவி கலெக்டர் கமல்கிஷோர், பஷீர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.