சுனாமியால் பலியான முதல் நபர்?
பாப்புவா நியூகினியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனித மண்டையோடு, ஆதிகால சுனாமியால் பலியான முதல் நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
1929-ம் ஆண்டு ஐடேப் என்ற நகர் அருகே பழங்கால மனித மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டது. நவீனகால மனிதர்களின் மூதாதையர்களாகக் கருதப்படும் ‘ஹோமோ எரக்டஸ்’ இனத்தின் தன்மைகளை இது கொண்டுள்ளது.
ஐடேப் நகரம் முன்பு ஒரு கடற்கரைப் பகுதியாக இருந்ததாகவும், சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் தாக்கப்பட்டதாகவும் தற்போது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த மண்டையோடு சுனாமியால் பலியான நபர் ஒருவரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மண்டையோடு கிடைத்த பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மண்ணையும், அந்தப் பகுதிக்கு அருகே 1998-ம் ஆண்டு சுனாமியால் சின்னாபின்னமான பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணையும் சர்வதேச குழு ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பின் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுனாமியை எதிர்கொண்டு வந்துள்ளார்கள் என்பதை வண்டல் மண்ணிலிருந்து கிடைத்த புவியியல் ஒற்றுமைகள் காட்டியிருப்பதாக நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் கோப் தெரிவித்துள்ளார்.
“நீண்ட நாட்களுக்குமுன் பலியான இந்த மண்டையோட்டுக்குச் சொந்தமான மனிதர், உலகில் சுனாமியால் பலியான பழமையான நபர் என்று முடிவுக்கு வந்துள்ளோம்” என்றார், பேராசிரியர் கோப்.
Related Tags :
Next Story