வடகொரிய தேச விசித்திரங்கள்!


வடகொரிய தேச விசித்திரங்கள்!
x
தினத்தந்தி 4 Nov 2017 2:52 PM IST (Updated: 4 Nov 2017 2:52 PM IST)
t-max-icont-min-icon

உலகையே மிரட்டும் முரட்டு தேசமாக வடகொரியா உள்ளது. உண்மையில் வடகொரியாவுக்குள் என்ன நடக்கிறது, அதன் உண்மையான வலிமை என்ன என்பது போன்ற விடையறியாக் கேள்விகள் உலக மக்கள் மனதில் அலைமோதுகின்றன.

டகொரியாவுக்குள் நுழைந்து அதைப் பற்றி அறிவதும் எளிதான விஷயமல்ல. வெளியுலக மக்கள் வடகொரியாவைப் பற்றி அறியமுடியாமலும், அதன் உள்நாட்டு மக்கள் வெளியுலகைப் பற்றி தெரிந்துகொள்ள இயலாமலும் கனமான இரும்புத்திரை போட்டு வைத்திருக்கிறார், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்.

இன்னும் 21-ம் நூற்றாண்டுக்குள் காலடி எடுத்துவைக்காத அளவு வடகொரியா தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த நாட்டில் இருந்து புள்ளிவிவரங்களைப் பெறுவது கடினமாக உள்ள நிலையில், அரிதாகக் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அந்நாட்டின் நிலை கணிக்கப்படு கிறது.

அப்படி வடகொரியா பற்றியும், அந்நாட்டை அதன் பங்காளியான தென்கொரியாவுடன் ஒப்பிட்டுக் கிடைத்திருக்கும் விவரங்களையும் பார்க்கலாம்...

1948-ம் ஆண்டில் வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் குடும்ப வம்சத்தினர்தான் அன்று முதல் இன்றுவரை அந்நாட்டை ஆட்சி புரிகின்றனர். ஆனால் தென் கொரியாவோ ஆறு குடியரசு ஆட்சிக்காலம், ஒரு புரட்சி, சில சதிகளையும் சந்தித்து, சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நோக்கி நகர்ந்துள்ளது. தென்கொரியாவில் இதுவரை மொத்தம் 12 அதிபர்கள் 19 ஆட்சிக் காலங்களை வழிநடத்தியுள்ளனர். அதாவது சில அதிபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பொறுப்பு வகித்துள்ளனர்.

இன்று உலகெங்கும் செல்போன் புரட்சி நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இரண்டரைக் கோடி மக்கள்தொகை கொண்ட வடகொரியாவில் பத்தில் ஒருவரிடமே செல்போன் இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள், தலைநகர் பியாங்யாங்கில் வசிப்பவர்கள்.

வடகொரிய நிலைக்கு நேர்மாறாக, 5.1 கோடி மக்கள்தொகை கொண்ட தென்கொரியாவில் அதைவிட அதிகமான செல்போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

‘கொரியோலிங்’ என்ற ஒரே நெட்வொர்க்கை கொண்ட வடகொரியாவின் செல்போன் சந்தை கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தாலும், வளர்ச்சி பெற்று வந்தது.

எகிப்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஓராஸ்காம் உடன் கூட்டணியாக நிறுவப்பட்ட கொரியோலிங்தான் வடகொரிய மக்களுக்கு பல ஆண்டுகளாக ஒரே ‘சாய்ஸ்’. பின்னர், 2015-ம் ஆண்டில் ‘பையல்’ என்ற போட்டி நெட்வொர்க் ஒன்றை வட கொரியா அமைத்தது.

செல்போன்கள் பற்றாக்குறை இருப்பதைப்போல, வடகொரியாவின் பெரும்பான்மை மக்கள் அந்த நாட்டுக்குள் மட்டுமே செயல்படும் ‘தனி இணையத்துக்கு’ மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான ‘இன்ட்ராநெட்’ போன்ற தாகும் அது.

மற்றொரு ஆச்சரியமான விஷயம், வடகொரிய ஆண்கள் சராசரி தென்கொரிய ஆண் களைவிட உயரம் குறைவாக இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வடகொரிய எல்லையைக் கடந்து, தென்கொரியாவுக்கு வரும் அகதிகளின் உயரத்தை சியோலில் உள்ள சுங்கியூன்குவான் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் சுவகிண்டிக் ஆய்வு செய்தார். அப்போது, தென்கொரிய ஆண்களைவிட, வடகொரிய ஆண்கள் சராசரியாக 38 செ.மீ. உயரம் குறைவாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

இந்த உயரக்குறைவுக்கு மரபியலை காரணமாக கூறமுடியாது. ஏனெனில் இரு நாட்டு மக்களும் ஒரே மரபைச் சேர்ந்தவர்கள். உணவுப் பற்றாக்குறையே வடகொரியர்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.

வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வெளியிடப்படும் புகைப்படங்களில், பரந்த, அழகிய நெடுஞ்சாலைகளையும், போக்கு வரத்து நெரிசல் இல்லாத சாலைகளையும் காணமுடியும். ஆனால் இந்த அசத்தல் எல்லாம் தலைநகரத்தில்தான். அதற்கு வெளியே நிலைமை மோசம்.

2006-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி வடகொரியாவில் சுமார் 25 ஆயிரத்து 554 கி.மீ. சாலைகள் உள்ளன. ஆனால் அதில் வெறும் 3 சதவீதம் மட்டுமே, அதாவது சுமார் 724 கி.மீ. நீளச் சாலைகள்தான் முறையாகப் போடப்பட்டவை.

வடகொரிய மக்களில் ஆயிரத்துக்கு 11 பேர் மட்டுமே கார்  வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

வடகொரியாவின் பொருளாதாரம் பெரிதும் நிலக்கரி ஏற்று மதியை நம்பியுள்ளது. ஆனால் வடகொரியாவில் இருந்து நிலக் கரியை வாங்கும் நாடுகளிலிருந்து கிடைக்கும் கணக்குகளின் அடிப்படையில் வடகொரியாவின் நிலக்கரி வர்த்தகத்தின் உண்மையான மதிப்பை அளவிடுவது கடினம்.

வடகொரியாவின் முக்கிய நிலக்கரி ஏற்றுமதி நாடுகளில் ஒன்று சீனா. அந்நாடும், கடந்த பிப்ரவரியில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதித்துவிட்டதாகக் கூறுகிறது.

ஆனால், ‘நிலக்கரி இறக்குமதிக்கு சீனா தடைவிதித்த பிறகும் வடகொரிய கப்பல்கள் சீனத் துறைமுகங்களில் நிற்பதைக் காண முடிவதாக கப்பல்களை கண்காணிப்பவர்கள் கூறுகின்றனர். எனவே சீனா, நிலக்கரி இறக்குமதியை குறைத்திருக்கலாம் என்று சொல்லலாம், ஆனால் முற்றிலுமாகத் தடை செய்யவில்லை’ என்று பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு ஆய்வாளர் கெண்ட் பாய்ட்சன் கூறுகிறார்.

1973-ம் ஆண்டு வரை வடகொரியாவும் தென்கொரியாவும் பொருளாதாரத்தில் ஒரே தட்டில் இருந்தன.

பின்னர், தென்கொரியா உலகின் முன்னணி தொழில்துறை நாடுகளில் ஒன்றானது. அதன் குறிப்பிட்ட நிறுவனப் பெயர்கள் உலகெங்கும் பிரபலமாயின. ஆனால் வடகொரியாவோ 1980-களில் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்தது.

ஆனால் எது எப்படியிருந்தாலும், ராணுவ வலிமையைக் கூட்டுவதில் மட்டும் வடகொரியா தொடர்ந்து கவனம் செலுத்தி வந்திருக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் உலக நாடுகள் வரிசையில் 52-வது இடத்தில் இருக்கும் வடகொரியா, உலகின் 4-வது பெரிய ராணுவத்தைக் கொண்டிருக்கிறது.

அந்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை ராணுவத்துக்கு ஒதுக்குவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஏறக்குறைய ஆண்கள் அனைவரும் ஏதோ ஒரு ராணுவப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

1990களின் பிற்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களால் வடகொரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாகக் குறைந்தது. இந்தக் காரணியை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும்கூட, ஆயுள் விஷயத்தில் வடகொரியா சுமார் 12 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.

வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை தொடர்வதும்,  தென்கொரியர்களைவிட வடகொரியர்கள் குறைந்தகாலம் வாழ்வதற்கான காரணிகளில் ஒன்றாக உள்ளது.

அதேநேரம், மற்றொரு விந்தையான முரண்பாடு, வடகொரியாவில் பிறப்பு விகிதம் அதிகமாகவும், தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது.

சுமார் பத்தாண்டு காலமாக நாட்டின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு தென்கொரியா பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், 2017-ம் ஆண்டில் அங்கு பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது.

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஊக்கத்தொகை கொடுப்பது, மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரிப்பது, மலட்டுத்தன்மை போக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி செய்வது என்று பல்வேறு விதங்களில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரிய அரசு முயல்கிறது. அதற்காக, பல லட்சம் டாலர்களை அந்நாடு செலவழிக்கிறது.

ஆனால் வடகொரிய அரசு சிரமப்படாமலே, அந்நாட்டில் அதிகக் குழந்தைகள் பிறக்கின்றன.

இப்படி எல்லாவகையிலும், உலக நாடுகளுடன் மட்டுமல்ல, ஒரே கம்பி வேலிக்கு அப்பால் உள்ள தென்கொரியாவுடனும் வடகொரியா ஏறுக்குமாறாக முரண்பட்டுக் காணப்படுகிறது. 

Next Story