டெங்கு கொசுக்கள் காணப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை
டெங்கு கொசுக்கள் காணப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.
நெல்லை,
டெங்கு கொசுக்கள் காணப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்புநெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20–க்கும் மேற்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்த வண்ணம் உள்ளனர். அங்கு மொத்தம் 300–க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாநகர பகுதியிலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த கலெக்டர் சந்தீப் நந்தூரி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூய்மை பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வீடு, வீடாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார்.
ரூ.5 லட்சம் அபராதம்இந்த நிலையில் நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் டயர் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த நிறுவன வளாகத்தில் போடப்பட்டு இருந்த டயர்கள், பழைய பொருட்களில் டெங்கு கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் அந்த நிறுவனத்தில் பழைய பொருட்களை ஆங்காங்கே போட்டு வைத்து இருப்பதாலும், தூய்மை இல்லாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாலும் தூய்மை பணிகளை முடிக்கும் வரை அந்த நிறுவனத்தை ‘சீல்‘ வைக்கவும் உத்தரவிட்டார். தூய்மை பணிகளை செய்து முடித்துவிட்டு மாநகராட்சி அதிகாரியிடம் அறிக்கை தாக்கல் செய்த பிறகு அதிகாரிகள் சீலை அகற்றவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு ‘சீல்‘ வைத்தனர்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.