நாங்குநேரியில் மொபட் மீது கார் மோதல்: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி
நாங்குநேரியில் மொபட் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார்.
நாங்குநேரி,
நாங்குநேரியில் மொபட் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் பால்சங்கரன் (வயது 55). நாங்குநேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவர் நேற்று தனது மொபட்டில் வள்ளியூருக்கு சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி– நாகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பல்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு கார் வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார்–மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பால்சங்கரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே பால்சங்கரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைதுஇதுகுறித்து உடனடியாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நாங்குநேரியைச் சேர்ந்த சிவசுப்பு (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொபட் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.