திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்
திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவொற்றியூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான கலைஞர்நகர், ராஜாஜிநகர், ஜோதிநகர், கார்கில் வெற்றிநகர், ராஜீவ்காந்திநகர் உள்பட 25 நகர்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் அனைத்தையும் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் வகையில் அகற்றும் பணி நடைபெற்றது.
ஜோதிநகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. பொக்லைன் எந்திரம் மூலம் அந்த அடைப்புகளை தூர்வாரி மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒருபுறம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அந்த பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே உள்ளதால் மழைநீர் சேர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ராஜீவ்காந்தி நகர், கார்கில் வெற்றிநகர் பகுதியில் தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் சிறுவர்கள் தெர்மா கோல்களில் சென்று பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருவதும், விளையாடுவதுமாக இருந்தனர். கலைஞர் நகரில் வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்ததால் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் வீட்டில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றினர்.
இதேபோல் மணலி, எண்ணூர், எர்ணாவூர் பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மணலி ஆமுல்லைவாயலில் இருந்து அரியலூர் செல்லும் பகுதியில் உள்ள புழல் ஏரி உபரிநீர் கடலுக்கு செல்லும் கால்வாய் உள்ளது. இதன் மீதுள்ள தரைப்பாலத்தையொட்டி அதிகளவில் ஆகாய தாமரைகள் வளர்ந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் இருந்தால் தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளது.
இதையடுத்து 10–க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மணலி மண்டல சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி மரியம்பல்லவி ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் புழல் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய், பக்கிங்காம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதையும் அவர்கள் பார்வையிட்டனர். கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை அகற்றி மழைநீரை வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் 3–வது மண்டலம் பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. நேற்று பகல் அமைச்சர்கள் காமராஜ், பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, 3–வது மண்டல உதவி கமிஷனர் சங்கர், மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் மாதவரம் தட்டாங்குளம் சாலை, புத்தகரம், புழல் கலெக்டர் நகர், அறிஞர் அண்ணாநகர், ரெட்டை ஏரி, வஜ்ரவேல் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் சூழ்ந்து இருப்பதை பார்வையிட்டனர்.
உடனடியாக பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் டீசல் மோட்டார்கள் மூலம் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும்படியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் மாதவரம் தட்டாங்குளம் பகுதியில் டீசல் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது மாதவரம் மண்டலக்குழு முன்னாள் தலைவர் டி.வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.