பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டிடங்களை அளவீடு செய்து வரிவசூல் நடவடிக்கை


பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டிடங்களை அளவீடு செய்து வரிவசூல் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2017 3:45 AM IST (Updated: 5 Nov 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டிடங்களை அதிகாரிகள் அளவீடு செய்து வரிவசூல் செய்யும் நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்பட 23 ஆயிரத்து 156 கட்டிடங்கள் உள்ளன. குடியிருக்கும் வீட்டிற்கும், வணிக நோக்கில் செயல்படும் கட்டிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு சிலர் ஓடுபோட்ட வீட்டை, கான்கிரீட் வீடாகவும், தற்போது உள்ள வீட்டில் கூடுதலாக ஒரு அறையும் கட்டி உள்ளனர். ஆனால் அதற்கு வரி செலுத்துவதில்லை. ஏற்கனவே அளவீடு செய்து விதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே வீட்டு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஒரு சிலர் வீட்டு வரி செலுத்தி விட்டு, அவற்றை வணிக நோக்கிற்கு பயன்படுத்தியும் வருகின்றனர். ஆகவே இந்த விதிமீறல் கட்டிடங்களை முறைப்படுத்த நகராட்சி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வீடு, வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்து கட்டிடங்களும் அளக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

நகராட்சி மூலம் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி, நகராட்சி கடைகளுக்கு குத்தகை வரி, காலியிட வரி உள்பட பல்வேறு வரி இனங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீட்டு வரி செலுத்துதை முறைப்படுத்தவும், விடுப்பட்ட வரியை வசூலிக்கவும் ஒவ்வொரு கட்டிடமாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. 4 மண்டலங்களில் 10 குழுவாக பிரிந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வீட்டு வரி செலுத்தி விட்டு வணிக நோக்கில் பயன்படுத்தியவர்கள், ஓடு வீட்டை கான்கீரிட் வீடாகவும், தற்போதைய வீட்டில் கூடுதலாக அறைகள் எடுத்து, அவற்றிற்கு முறையாக வரி செலுத்தாதவர்களை கண்டறிய கட்டிடங்கள் அளக்கப்படுகிறது. அதன்படி 960 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 620 பேரிடம் இருந்து ரூ.50 லட்சம் வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வரி வசூலிக்கும் முறை ஆன்–லைனுக்கு மாற்றப்பட்டு உள்ளது. தற்போது பொதுமக்கள் நேரடியாக நகராட்சி அலுவலகத்துக்கு வந்து வரி செலுத்தி வருகின்றனர். இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தி கொள்ளலாம். இதற்கு நகராட்சி வரி செலுத்துவதற்கான இணையதளத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் என்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து எந்த வார்டு, வரி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வரி செலுத்தியதற்கான குறுந்தகவல் உங்கள் செல்போன் எண்ணுக்கும், இ–மெயில் முகவரிக்கும் வந்து விடும். பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் அனைத்து வரி இனங்களுக்கும் வரி செலுத்தி நகராட்சி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.ள

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வக்கீல் அய்யப்பன், துணை சபாநாயகர், நகராட்சி கமி‌ஷனர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு தமிழகத்தில் எங்கும் விதிக்கப்படாத வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசாணை எதுவுமின்றி தன்னிச்சையாக வரி ஏய்ப்பை தடுக்கும் நடவடிக்கை என்று கூறிக் கொண்டு தற்போது மீண்டும் அனைத்து கட்டிடங்களையும் அளந்து விடுப்பட்ட சொத்துக்களுக்கு வரி விதிப்பு செய்கின்றனர். மேலும் நகராட்சி அலுவலர்கள் வீடுகளை அளந்தும் 6½ ஆண்டுகளுக்கு விடுபட்ட வரியை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறி அதிகாரிகள் அனைத்து வீடுகளுக்கும் நோட்டீசு அளித்து வருகின்றனர். நகராட்சியின் செயல்பாட்டிற்கு வரி அவசியம் தான். இதுவரை வரி விதிக்கப்படாத கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் விடுப்பட்ட வரியை வசூல் செய்கிறோம் என்று ஏற்கனவே வரி விதிக்கப்பட்ட கட்டிடங்களை மீண்டும் அளந்து கூடுதலாக வரி விதிப்பு செய்வது அதிகாரிகளின் முரண்பட்ட தன்மையை காட்டுகிறது.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920–ன்படி வரி விதிப்பு தொடர்பான விதிகளை முறையாக அமல்படுத்தாமலும், நடைமுறைப்படுத்தாமலும் அதிகாரிகள் செயல்படுகின்றனர். அந்த விதியின்படி ஒவ்வொரு கட்டிடங்களையும் அளக்கும் முன் அந்த கட்டிடத்திற்கு ஏற்கனவே விதித்த வரிக்கு உண்டான கணக்கீட்டு தாளை சொத்தின் உரிமையாளரிடம் அளிக்க வேண்டும். சொத்திற்கு உண்டான நகராட்சி ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எந்த அடிப்படையில் விடுப்பட்ட வரி என்று கணக்கீடு செய்வதை உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

6½ ஆண்டுகளுக்கு விடுபட்ட வரி வசூல் செய்யப்படுகிறது என்பது சட்டப்படியா? என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். புதிய வரி விதிப்பு செய்யும் போது எவ்வாறு வரி விதிக்கப்பட்டது என்று கணக்கீட்டு தாளை வழங்க வேண்டும். சொத்து வரி எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது. வரி விதிப்பு செய்யப்படும் கட்டிடத்தின் பகுதிகள் எந்த மண்டலத்தில் அமைந்துள்ளது போன்ற விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே வரிவிதிக்கப்பட்ட கட்டிடங்களில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் வரி விதிக்கப்பட்டபோது பணிபுரிந்த, தொடர்புடைய நகராட்சி அலுவலர்கள், அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. நகராட்சி மக்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட வரிப்பணம் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமலும், பராமரிக்கப்படாமலும், பயனற்று கிடக்கின்றன. கடந்த ஒரு ஆண்டாக 35–வது வார்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஆனால் தனியார் ஒப்பந்ததாரருக்கு பராமரிப்பு தொகை மட்டும் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது. எரியாத விளக்குகளுக்கு பணம் கொடுப்பது வரி ஏய்ப்பு இல்லையா? தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகராட்சி அலுவலகத்தை லாந்தர் விளக்குகளுடன் முற்றுகையிடுவோம். சிறப்பு நிலை நகராட்சிக்கு கடந்த ஒரு ஆண்டாக கமி‌ஷனர் நியமிக்கவில்லை. எனவே புதிய கமி‌ஷனரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story