மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்காக 61 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன


மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்காக 61 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்காக 61 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கணேஷ் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் 68 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. மழையால் பாதிப்பு ஏற்பட்டால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்குவதற்காக அருகிலேயே 61 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளின் தாசில்தார் மூலமாக நிவாரண உதவிகள் வழங்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் 15 புயல் பாதுகாப்பு மையங்களும், 10 பல்நோக்கு சமுதாயக்கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, கீரனூர், திருமயம் ஆகிய 4 உபகோட்டங்களுக்கு உட்பட்ட நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்க 3 ஆயிரத்து 500 மணல் மூட்டைகளும், நீர் நிலையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க 1,500 சவுக்கு கம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களுக்கு உதவ கட்டுமாவடி, கீழகுடியிருப்பு, முடுக்கு வயல், மேலஸ்தானம், வடக்கு அம்மாப்பட்டினம், பொன்னாகரம், புதுக்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில் செயல்படும் மீனவ சங்கத்தை சேர்ந்த நன்கு நீச்சல் பயிற்சி பெற்ற 42 மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். கட்டுமாவடி, கீழகுடியிருப்பு, முடுக்கு வயல், மேலஸ்தானம், வடக்கு அம்மாப்பட்டினம், பொன்னாகரம், புதுக்குடி, கோட்டைப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், அய்யபட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா பகுதிகளில் 30 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

பேரிடர் மேலாண்மை பணிகளுக்காக புதுக்கோட்டை, கறம்பக்குடி வட்டங்களுக்கு புதுக்கோட்டை உதவி கலெக்டரும், அறந்தாங்கி, மணமேல்குடி வட்டங்களுக்கு அறந்தாங்கி வருவாய் கோட்ட அதிகாரியும், இலுப்பூர், குளத்தூர் வட்டங்களுக்கு இலுப்பூர் வருவாய் கோட்ட அதிகாரியும், விராலிமலை வட்டத்திற்கு உதவி ஆணையரும் (கலால்), கந்தர்வகோட்டை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியும், பொன்னமராவதி வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியும், ஆலங்குடி வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அதிகாரியும், திருமயம் வட்டத்திற்கு சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டரும், ஆவுடையார்கோவில் வட்டத்திற்கு நிலஅளவைத்துறை உதவி இயக்குனரும், மண்டல கண்காணிப்பாளர் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

மேலும் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் நியாய விலை கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மழை வெள்ளக்காலங்களில் சாலைகள், பாலங்கள் சேதம் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்த தேவையான மோட்டார் பொருத்தப்பட்ட ரம்பங்கள், பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு உரிய பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மண்டல கண்காணிப்பு அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story