கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கழுத்தை அறுத்துக்கொலை கூலித்தொழிலாளி கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கழுத்தை அறுத்துக்கொலை கூலித்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Nov 2017 4:30 AM IST (Updated: 5 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சின்னகணவாய்காடு பகுதியை சேர்ந்தவர் சோழகவுண்டன் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் பழனி (37), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராணி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சோழகவுண்டனுக்கும், பழனியின் மனைவி ராணிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் பழனி தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் சோழகவுண்டனிடம் சென்று தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் சோழகவுண்டனும், ராணியும் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சின்னகணவாய்காடு பகுதியில் உள்ள வனப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக பழனி சென்றுள்ளார். அந்த நேரம் சோழகவுண்டனும் அங்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கீழே கிடந்த கல்லை எடுத்து பழனி மீது சோழகவுண்டன் எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த பழனி தான் வைத்திருந்த கொடுவாளால் சோழகவுண்டனின் கையில் வெட்டியுள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறிதுடித்து அருகே இருந்த பாறைகளுக்கு நடுவே நிலைதடுமாறி விழுந்தார். இதைத் தொடர்ந்து சோழகவுண்டனின் கழுத்தை கொடுவாளால் பழனி ஆத்திரம் தீர அறுத்தார். இதில், ரத்த வெள்ளத்தில் சோழகவுண்டன் துடிதுடித்து உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பழனி அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் சோழகவுண்டன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சோழகவுண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பழனி கிராம நிர்வாக அலுவலர் மாதுவிடம் சரணடைந்தார். அவர், பழனியை தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து கூலித் தொழிலாளி பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story