20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணை செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் கரிகாலன் வரவேற்றார். இதில் அரசு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தர்ணா போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் கொள்கை முடிவின்படி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்போது பணியிழக்கும் பணியாளர்களை அரசு துறையில் காலி பணியிடங்களில் விருப்பத்தின் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

நிவாரணம்

இடமாறுதல்களில் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர், மாவட்ட மேலாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு சுழற்சி முறையில் இடமாறுதல் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ரத்து செய்யப்பட்ட பழைய விகித ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும். வழிப்பறி கொள்ளையர்களின் கொலை வெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் ராமன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிவண்ணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல விடுதி பணியாளர் சங்க மாநில தலைவர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story