குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேட்டி


குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக திருவாரூர் பஸ் நிலைய பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது மழைநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வடிகாலை பாதாள சாக்கடையுடன் இணைத்திடவும் நகராட்சி ஆணையர் காந்திராஜிக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து விஜயபுரம் இடும்பன் நகரில் வடிகால் ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பா நடவு செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை குறையும் பட்சத்தில் 2 நாட்களில் மழைநீர் வெளியேறி விடும்.

மழை தொடரும் பட்சத்தில் பயிர்களின் சேதம் குறித்து அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 3 மாதங்களுக்கு தேவையான அனைத்து பொதுவினியோகதிட்ட பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மழையினால் எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் நிர்மல்ராஜ், கோபால் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அமிர்தலிங்கம், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜசேகர், நகராட்சி ஆணையர் காந்திராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story