பள்ளிப்பட்டு அருகே குப்பையில் கிடந்த பூச்சி மருந்தை குடித்த சிறுவன் சாவு
பள்ளிப்பட்டு அருகே குப்பையில் கிடந்த பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கொளத்தூர் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 29). சென்னையில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (24). இவர்களது மகன் கதிரவன் (4). வீட்டின் முன்னால் விளையாடி கொண்டிருந்த கதிரவன் குப்பையில் கிடந்த பூச்சி மருந்தை திறந்து குடித்துள்ளான்.
இதில் மயங்கிய கதிரவனை பெற்றோர் உடனடியாக பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கதிரவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கதிரவன் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து பாபு பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.