வெள்ள நிவாரண பணிகளில் அரசு தோல்வி அடைந்து விட்டது


வெள்ள நிவாரண பணிகளில்  அரசு தோல்வி அடைந்து விட்டது
x
தினத்தந்தி 5 Nov 2017 5:13 AM IST (Updated: 5 Nov 2017 5:13 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள நிவாரண பணிகளில் அரசு தோல்வி அடைந்து விட்டது என சேலத்தில் விஜயகாந்த் தெரிவித்தார்.

சேலம்,

தே.மு.தி.க.வின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணனின் தாயார் கிருஷ்ணவேணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்தநிலையில் நேற்று மாலை கிச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் ஆறுதல் கூறுவதற்காக வந்தார்.

பின்னர் அவர்கள் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், கிருஷ்ணவேணி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது கட்சியின் மாநில அவை தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், நிர்வாகி இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர். விஜயகாந்த்தை பார்ப்பதற்காக அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அரசு தோல்வி அடைந்து விட்டது. இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி என்பதை திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளத்தில் தவித்து வரும் நிலையில், தொடர்ந்து மழை பெய்தால் நிலைமை மிகவும் மோசமாகும். புதிய திட்டங்களுக்கும், நிவாரணத்திற்கும் நிதி ஒதுக்குதல் என்பது அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியாகும்.

5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்த ஆட்சி செயல்படுகிறது. அரியானாவில் எப்படி பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல் எங்கள் கட்சியின் வளர்ச்சியை பாருங்கள், எப்படி வளருதுன்னு பாருங்கள். வருகிற தேர்தலில் என்கூட யாரும் வேண்டாம், தனியாக தான் நிற்பேன். ஜெயலலிதா இறந்துவிட்டதால் அமைச்சர்கள் ஆள், ஆளுக்கு பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story