பள்ளி–கல்லூரிகளில் கராத்தே கற்றுக் கொடுப்பது அவசியமானதாகும்


பள்ளி–கல்லூரிகளில் கராத்தே கற்றுக் கொடுப்பது அவசியமானதாகும்
x
தினத்தந்தி 5 Nov 2017 5:42 AM IST (Updated: 5 Nov 2017 5:42 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி–கல்லூரிகளில் கராத்தே கற்றுக்கொடுப்பது அவசியமானதாகும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

மங்களூரு,

மங்களூருவில் நடக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டியை தொடங்கி வைப்பதற்காக நேற்று முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர் மங்களூரு நேரு மைதானத்தில் நடந்த கராத்தே போட்டியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு, மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில், மைசூரு தலைப்பாகை அணிவித்தார். பின்னர் அங்கு நடந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

மங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடப்பது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மேயர் கவிதா சனில் என்னிடம் தெரிவித்தார். இந்த போட்டியை தொடங்கி வைக்க வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு கராத்தே தெரியாது. ஏராளமான கராத்தே போட்டிகளை பார்த்துள்ளேன். மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில், கராத்தே போட்டியில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கி உள்ளார்.

கடந்த 2004–ம் ஆண்டு விளையாட்டு துறையில் அவர் ராஜ்யோத்சவா விருது வாங்கி உள்ளார். அவர் தான் எனக்கு கராத்தே எவ்வாறு விளையாடுவது என்பதை கற்றுக்கொடுத்தார். அதன் மூலம் கராத்தே எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். கவிதா சனில், விளையாட்டு துறையில் ஆர்வம் உடையவராக உள்ளார்.

கர்நாடகத்தில் பள்ளி–கல்லூரிகளில் கராத்தே கற்றுக்கொடுப்பது அவசியமானதாகும். இது மாணவ–மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு அது பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் கராத்தே தெரிந்து வைத்திருப்பது, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க பயன்படும். இதனால், பெண்கள் கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story