பண மதிப்பிழப்பு காரணமாக நாட்டில் 86 சதவீதம் பணபரிவர்த்தனை முடங்கியது


பண மதிப்பிழப்பு காரணமாக நாட்டில் 86 சதவீதம் பணபரிவர்த்தனை முடங்கியது
x
தினத்தந்தி 5 Nov 2017 5:47 AM IST (Updated: 5 Nov 2017 5:46 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு காரணமாக நாட்டில் 86 சதவீதம் பணபரிவர்த்தனை முடங்கியது என்று காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கூறினார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி தொடங்கியது. விழா வருகிற 19-ந் தேதி கோவையில் நிறைவடைகிறது. இதில் இந்திராகாந்தியின் அரசியல் சாதனைகள், நெருக்கடி நிலையை அவர் எவ்வாறு சமாளித்தார்? அவரின் செயல்பாடு குறித்து விழாவில் விளக்கப்பட்டு வருகிறது. வேலூரில் நேற்று நடந்த இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் உள்பட பலர் வருகை தந்தனர்.
முன்னதாக அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்காரணமாக பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் சந்தித்துள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வங்கி வாசல் முன்பாக பணத்தை மாற்ற பல மணி நேரம் வரிசையில் நின்று அவதியடைந்தனர்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு காரணமாக நாட்டில் 86 சதவீதம் பணபரிவர்த்தனை முடங்கியது. வங்கியில் பணம் மாற்றுவதற்காக வரிசையில் நின்று மூச்சு திணறி, நெரிசலில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 கோடியே 72 லட்சம் பேர் வேலை இழந்தனர். இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. சிறு, குறு தொழில்கள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். தொழில் நலிவடைந்து விட்டது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

இதனை கண்டித்து வருகிற 8-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 8-ந் தேதி இரவு பணத்தை வங்கியின் மாற்ற முயன்றபோது உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு மழைக்கு கேட்ட முழு நிவாரண தொகையான ரூ.8 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்காமல் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மட்டுமே வழங்கியது. நிவாரண தொகை முழுமையாக வழங்காத காரணத்தாலும், வாங்கிய தொகையை செலவிடாததாலும் இந்தாண்டு வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசு அனைத்து நலன்களையும் இழந்து வருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆதாயம் அடைந்து வருகிறது. அமைச்சர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி வருகிறார்கள். நடிகர் கமல் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று இந்து அமைப்பு கூறியது கண்டிக்கத்தக்கது. இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அதற்குரிய பதிலை கூறாமல் அவரை கொல்லுவேன் என்று கூறுவது சர்வ அதிகாரத்தின் உச்சகட்டமாகும். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை அ.தி.மு.வி.னர் நடத்த மாட்டார்கள்.

ஜனநாயக நாட்டில் நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய் உள்பட யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். நடிகர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் தான் கருத்து கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் டோல்கேட் அருகேயுள்ள திருமண மகாலில் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநில தலைவர் திருநாவுக்கரசர், சின்னா ரெட்டி எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள்.
இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி.வேணுகோபால், மாவட்ட தலைவர்கள் டீக்காராமன், ஜெ.ஜோதி, பிரபு, பஞ்சாட்சரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story