உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 5 Nov 2017 11:38 AM IST (Updated: 5 Nov 2017 11:38 AM IST)
t-max-icont-min-icon

அவன் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன். வயது 12. வீட்டிற்கு ஒரே பையன். சிறுவயதிலே பணத்தை கண்டபடி செலவு செய்ய எளிதாக கற்றுக்கொண்டான்.

வன் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன். வயது 12. வீட்டிற்கு ஒரே பையன். சிறுவயதிலே பணத்தை கண்டபடி செலவு செய்ய எளிதாக கற்றுக்கொண்டான். அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவிடமும், அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடமும் பணம் வாங்கி செலவு செய்துகொண்டிருந்தான். பெற்றோர் கலந்துபேசி, இருவரும் பணம் கொடுத்துக்கொண்டிருப்பதை திடீரென்று நிறுத்தினார்கள். மகனிடம், ‘செலவை குறைத்துக்கொள். இனி அப்பாவிடம் மட்டும்தான் பணத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்’ என்றார், அம்மா.

பெற்றோரின் அந்த நடவடிக்கை சிறுவனுக்கு மிகுந்த எரிச்சலை உருவாக்கியது. செலவுக்கு தினமும் தனக்கு அதிக பணம் தரவேண்டும் என்று வாதிட்டான். அவர்கள் மறுத்தனர். அதனால் தனது கோபத்தை வார்த்தைகளில் கொட்டினான். வீட்டுப் பொருட்களை உடைத்தான். ஆனாலும் பெற்றோர் அசைந்துகொடுக்கவில்லை.

மிகுந்த கோபம் கொண்ட அவன், அன்று காலை பெற்றோரை வாட்டி வதைக்க அதிரடியாக திட்டம்போட்டான். வீட்டு வேலைக்காரர்கள் வந்து அன்றாட வேலைகளை முடித்துவிட்டு திரும்பிச் செல்லும் வரை காத்திருந்தான். வீட்டிற்குள் அவனது அப்பா, அம்மா மட்டும் இருந்தார்கள். அவர்கள் தனியறையில் ஏதோ முக்கியமான விஷயத்தை பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரது செல்போனையும் நைசாக எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். வீட்டின் சாவியையும் கையில் எடுத்தான்.

பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டின் முன் கதவையும், பின் கதவையும் பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு சாவியை கையில் எடுத்துக்கொண்டான். இருவரது செல் போனையும் ஒரு கவரில் சுற்றி வீட்டுத் தோட்டத்தில் வைத்துவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டான்.

தாங்களை வீட்டுக்குள்ளேவைத்து பூட்டிவிட்டதும், செல்போன்களையும் எடுத்துச் சென்றுவிட்டதும், பெற்றோருக்கு தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. அவர்களால் உடனடியாக யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. தாங்கள் சிக்கிக்கொண்டதைவிட, மகன் தவறான முடிவேதும் எடுத்துவிடக்கூடாதே என்ற பயம்தான் அவர்களுக்கு அதிகம் ஏற்பட்டது.

அவர்கள் வெகுநேரம் கூச்சல்போட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் கவனத்தை ஈர்த்து, பூட்டை உடைத்து வெளியே வந்து உறவினர்களுக்கு தகவல்கொடுத்தார்கள். சிறுவன் காணாமல் போனது பற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் வந்த பின்புதான், சிறுவன் தனது தந்தையின் கிரடிட் கார்டையும் தூக்கிச்சென்றுவிட்டது தெரியவந்தது. அதைவைத்து துப்பு துலக்க முடிவுசெய்தனர். ஆங்காங்கே சில ஏ.டி.எம். சென்டர்களில் பணம் எடுத்திருக்கிறான். போலீஸ் ஒவ்வொரு இடமாக அலைந்தது. ஒரு சினிமா தியேட்டரில் இரவு படம் பார்க்கும் எண்ணத்தில் கார்டை பயன்படுத்தி டிக்கெட் வாங்கியிருக்கிறான். அங்கு சென்ற போலீசார், தியேட்டர் வளாகத்தை தோண்டித் துருவித் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் தியேட்டர் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

அவனால் பெற்றோர், உறவினர்கள், போலீசார் 12 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனர். அவனோ ரொம்ப கூலாக, ‘பெற்றோர் மீதிருந்த கோபத்தில் அவ்வாறு செய்துவிட்டேன்.. மன்னிச்சுடுங்க..’ என்றான்.

பசங்க எப்படி எல்லாம் மிரட்டுறானுக பார்த்தீங்களா..!

- உஷாரு வரும்.


Next Story