ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த பிளஸ்–2 மாணவர் மாயம்


ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த பிளஸ்–2 மாணவர் மாயம்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:45 AM IST (Updated: 6 Nov 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த பிளஸ்–2 மாணவர் மாயமானார். தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் தேடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆவடி,

திருமுல்லைவாயல் கிழக்கு தென்றல் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஆகாஷ் (வயது 18). ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இந்தநிலையில் ஆகாஷ் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச்சென்றார். அப்போது அங்குள்ள மதகு அருகே சிலர் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். மீன் பிடிப்பதை வேடிக்கை பார்த்த ஆகாஷ், கால்வாயில் இறங்கி குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் தண்ணீர் அதிகமாக இருப்பதால் குளிக்க வேண்டாம் என்று கூறினர்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆகாஷ் கால்வாயில் குதித்து குளித்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. உடனே இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.

இதையடுத்து ஆவடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரம் கால்வாயில் மாணவரை தேடினர். ஆனால் ஆகாஷ் கிடைக்கவில்லை. அதற்குள் இருட்டி விட்டதால் தேடும் பணியை நிறுத்தி விட்டு சென்றனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story